சங்கத்தமிழ்- செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்

தொல்காப்பியர்



உலகில் தற்போது வழங்கிவரும் மொழிகளில் பல முதன்முதலில் உச்சரிக்கபடத் தொடங்கமுன்னரே இலக்கிய ரீதியாகவும் இலக்கண ரீதியாகவும் உச்சம் தோட்ட மொழி தமிழ்மொழி. பிறத்தலை, வளர்தலை, காதலை, பொருதலை, வாழ்தலை, தலை தாழாது வாழ்தலை, இறத்தலை, சிறத்தலை... என  தம் அனைத்தையும் இலக்கியமாக்கியவர்கள் நம் முன்னவர்கள். இன்று நாமனைவரும் பேஸ்புக்கில் சிலபல தமிழ் பெருமை புகைப்படங்களையும் அபத்தங்களையும் (அணுவை பிளந்து எழ்கடலை புரட்டி... என்ற பாடலின்மூலம் ஔவையார் அணுசக்தி கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளார். share if you are proud to be a tamilian… என்றவாறான பல ஸ்டேட்டஸ்களை நீங்கள் முகப்புத்தகத்தில் சந்தித்திருப்பீர்கள். நாங்க யாரு? முகப்புத்தகம், சாளரம் என்று வணிகப்பெயர்களுக்கே தமிழ்ப்பெயர் வைத்து தமிழை வளர்ப்பவர்களாயிற்றே?) பகிர்ந்து வளர்க்கும் தமிழை சங்கம் வைத்து வளர்த்தவர்கள். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு மொழியில் இத்தனை செழுமை இருப்பது உலக ஆச்சரியம். எனது மொழி என்று அல்லாது நடுநிலையாக பார்த்தாலுமே இது வியப்பான தகவல்தான்.  அதிலும், இன்றைவரை வாழ்க்கைக்கு பொருந்திவரக்கூடிய அற, வணிக, முகாமைத்துவக் கருத்துக்களை அன்றைக்கால இலக்கியங்களில் காணமுடிவது மிக்க அதிசயம்தான். ஆனால் நமது அவலம், இவையெல்லாம் உலகப்புகழ் பெறமுடியாது போனதுதான். காரணங்கள் பலப்பல. ஒரு சிறுவன் மிக அழகிய பக்திப் பாசுரங்களை பாடியிருக்கிறான், அவனது உண்மையான வரலாற்றை ஆராயாமல், அவன் மையம்மையாரிடம் பால் குடித்ததால்தான் அப்படி பாடினான் என்று கூறி fileஐ மூடிவிட்டோம். அவன் ஒரு அற்புதமான கவிஞன் என்றுகூட நாம் கடைசிவரை உணரவில்லை. தெய்வ அருள் பெற்றவன் என்றே நம்பிவந்ததால், அவனது திறமையை மதிக்க நாம் தயாரில்லை.  உலக சமத்துவம், ஏற்றதாழ்வு வேண்டாம் என்று பாடிய ஒரு கவிஞனின் பெயர் நமக்கு தெரியாதுபோனது, நாமாக ஒரு பெயர் வைத்தோம், எப்படி? அவனது ஊர்ப்பெயரையும், அவனது தொழிற்(சாதிப்)பெயரையும் சேர்த்து அவனது பெயராக்கிவிட்டோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர்! எல்லாமே நமதூர்தான், எல்லாமே உறவுதான் என்று பாடியவர் கணியன் பூங்குன்றனார். காலக் கொடுமை!


இவ்வாறாக நம்மால், நம் காரணமாகவே உலகப்புகழ் பெறமுடியாது போன நமது தெய்வத்தமிழ் இலக்கியங்களிலிருந்து சில அற்புதப்பாடல்களை பார்ப்போம். ஏனெனில், இந்த இலக்கியப் பாடல்கள் உலகத்துக்கு தெரியாதுபோனாலும் பரவாயில்லை, நமக்கே தெரியாது போனால்? அவமானமல்லவா?

தமிழ்த்தாய்

சங்கங்கள்

மூன்று தமிழ்ச்சங்கங்கள் முற்காலத்தில் தமிழை வளர்க்க அமைக்கப்பட்டன. இவை பற்றிய தகவல்கள் அனைத்துமே மிகைபடுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. ஆகையால் இம்மூன்று சங்கங்களைப்பற்றியும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. பல இலக்கிய, கல்வெட்டு, செப்பேட்டு, நூல்க் குறிப்புக்களைக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் இறையனார் எழுதிய அகப்பொருள் உரை என்கிற நூலில்தான் முதன் முதலில் சங்கம் குறித்த பாகுபாடு வருகிறது. அவரது கருதுகோள்களே பின்பற்றப்படுகின்றன.

முதற் சங்கம்.

இது கி.மு 4 முதல் 2ஆம் நூற்றாண்டுகளில் தென்மதுரையில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில்தான் சிவபெருமான், முருகக் கடவுள், குபேரன் உள்ளிட்ட இறைவர்கள் வந்து தமிழ் வளர்த்ததாக கூறப்படுகிறது. அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகனார் முதலியோரும் இச்சங்கத்தில் தமிழ் வளர்த்தவர்களே. காய்ச்சின வழுதி முதல் கடுங்கோன் வரையாக 89 பாண்டிய அரசர்கள் இந்த சங்கத்தை ஊக்குவிக்க, 4,440 ஆண்டுகள் மொத்தம் 4449 புலவர்களுடன் இது நடந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்தச் சங்கத்தின் முக்கிய நூல் அகத்தியம். இது ஒரு இலக்கண நூல். ஒரு இலக்கண நூல் உருவாவதற்கு முதல் பல செழித்த இலக்கியப் படைப்புக்கள் உருவாகியிருக்க வேண்டும் என்பது தர்க்க அடிப்படையிலான தீர்வு. எனவே, முதற் சங்ககாலத்தில் பின்னெப்போதுமில்லாதளவுக்கு உயர்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. இந்த சங்கமே குமரிக் கண்டத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் குமரிக்கண்டம் இருந்ததற்கு புவியியல் ரீதியாக ஆதாரம் இல்லை. எனினும், குமரி முனையின் தென்பகுதி முற்காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதியே (குமரி நிலநீட்சி) இச்சங்கம் வளர்ந்த களமாக இருக்கலாம் என்கிறார்கள். பின்னர் குமரியை கடல் கொண்டபோது இச்சங்க புலவர்களால் யாக்கப்பட்ட சகல இலக்கியங்களும் அழிந்துபோயின. தமிழின் மிகப்பெரிய இழப்புகளுள் இதுவும் ஒன்று.

இடைச் சங்கம் (இரண்டாம் தமிழ்ச் சங்கம்)

இது கிமு 2 முதல் 1ஆம் நூற்றாண்டுவரை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கபாடபுரத்தை தலைமையிடமாக கொண்டு இது நடந்தது. வேண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டிய மன்னர்கள் புரவலராயிருக்க, அகத்தியனார், (இவர் முன்னைய அகத்தியரா, வேறு ஒருவரா என்பது சர்ச்சை.) வெள்ளூர் காப்பியனார், தொல்காப்பியர், இளந்திரையன் உள்ளிட்ட 3700 புலவர்கள் தமிழை வளர்த்தனர். காலி, குருகு, வியாழமாலை, அகவல், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் முதலிய பல  நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு தற்போது எஞ்சியுள்ளது. இதுவே நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் பழமையானது. தமிழை ஆராய்ந்து, எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களையும் தெளிவாக விபரித்து எழுதப்பட்ட நூல் தொல்காப்பியம். இதன் இலக்கண வகுப்புக்களை பார்க்கும்போது, இவற்றையெலாம் வகுக்கவேண்டிய அளவுக்கு, அல்லது வகுத்த அளவுக்கு அங்கே இலக்கியம் நிறைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால் தூர் ஊழ் காரணமாக கபாடபுரத்தையும் கடல் கொண்டது, தமிழ்ச்செல்வம் மறுபடி கடலில் கரைந்தது.

கடைச் சங்கம் (மூன்றாம் தமிழ்ச் சங்கம்.)

கிபி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுவரை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நமக்கு இதுவரை கிடைத்துல சங்க இலக்கியங்கள் யாவுமே இக்காலத்தவையே. மதுரையில் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டு தொடர்ந்து 1850 ஆண்டுகள் நடந்ததாக கூறப்படுகிறது. செந்தமா பூதனார், அறிவுடை அரனர், பெருங்குன்றுக்கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதநில நாகனார், நக்கீரனார் முதலிய 49 புலவர்கள் தமிழ் வளர்த்தார்கள். அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் ஏராளமான இலக்கியங்கள் யாக்கப்பட்டன. கடல் அழிக்காத இக்கால இலக்கியங்களை காலம் அழிக்க, மீதியான நூல்களே நமது சங்க இலக்கியங்கள். உலகெங்கிலும் பின், நூறு ஆண்டுகள் கழித்து அறமாகவும், விழுமியமாகவும் கருதப்படப்போகிற கருத்துக்களை அப்போதே தாங்கியவை.

பண்டைத்தமிழரின் வீரம், காதல், பக்தி முதலிய சகலதையும், மிகைப்படுத்தித்தான் என்றாலும், உலகுக்கு உரைப்பவை. வேறு எந்த நாகரிகத்திலும் காணமுடியாத உறவுகளின் வலிமைகள்,  உறவைவிட முக்கியமான வீரம், வீரத்தைவிட முக்கியமான அறம் என்று சகலத்தையும் காட்டிநிற்பவை. தமிழின் பெருமிதம் அல்லது கம்பீரம் அல்லது ஆணவம் – சங்கத்தமிழ் இலக்கியங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்