வெடியரசன் கோட்டையா.....???? வெடிமிகு பேட்டையா.......????


ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும் - 02 

போன பதிப்பில் கோப்பாய் கோட்டை பற்றியும் அங்கு சென்று நாமடைந்த புளகாங்கிதத்தையும் தெரிவித்திருந்தேன். அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும். இவ்வாறு வெங்காயம் நண்பர்களுடன் நாம் சில பல ஊர்களுக்கு சென்று அடிவாங்காத குறையாய் நின்ற நிலையில் அடுத்ததாக நாம் செல்ல திட்டமிட்டிருந்த இடம்தான் ஊர்காவற்றுறையும் அதன் சிறப்பு மிக்க இடங்களும். ஒரு வழியாக ஊர்காவற்றுறைக்கு போய் சேர்ந்தோமா...........பிற ஊர்களில் நாம் பெற்ற அனுபவங்களையும் வலிகளையும் கொஞ்சமும் குறையவிடாது உயர்த்திவிட்டது அந்த ஊர்.

விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும் 


இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.


                                                                
மேலும் இலங்கை தென்னிந்தியாவின் கீழாக அமைந்திருப்பதால் தென்னிந்திய அரசுகளின் படைஎடுப்புக்களுக்கும் ஆட்சிக்கும் அடிக்கடி உட்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவு. இதனால் சோழப்பேரரசின் படை எடுப்புக்கள் இங்கு நிகழ்ந்த போது அவர்களுடன் வந்த வெவ்வேறு படைபிரிவுகளும் இங்கு தங்கிவிட நேர்ந்தது. [ கவனிக்க சோழர் படையெடுப்புக்கள் காலத்தால் பிற்பட்டது என்பது அல்ல முற்காலச் சோழர்களின் காலத்திலிருந்து இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்ததுடன் அவர்களுக்கும் முந்திய வரலாறையுடைய பாண்டியர்கள் காலத்திலும் இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன ] அவ்வாறு வந்த படைப்பிரிவுகளும் சிற்றரசர்களும் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் ஆட்சியை அமைத்து வழிநடத்தி வந்தனர்.



 அப்படி இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கியவர்களே விஷ்ணு புத்திரர் வம்சத்தை சார்ந்தவர்கள். [கவனிக்க இவ்வரச மரபினர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகின்ற போதிலும் இல்லை இவர்கள் பிறப்பிலேயே இலங்கையை சார்ந்தவர்கள் என்று கூறி அதற்கு பல புராணங்களில் இருந்து சான்றுகள் கூறப்பட்டுள்ளன மேலும் நாகதீவு, ஏழ்பாலைநாடு எனும் தீவுநாடுகளையும் இலங்கையையும் கருத்தில் கொண்டால் இதுவும் உண்மை எனக்கருத இடமுண்டு.] கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கோட்டைகள் நெடுந்தீவு, காரைநகர், ஊர்காவற்றுரை மற்றும் சில தீவுப்பகுதிகளில் அமைந்திருந்தது.

   
                     
                                    அவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டைகளில் ஒன்றே இன்று ஊர்காவற்றுறையில் “ஹிமன்கில்” கடல் கோட்டைக்கு சற்று அருகில் அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது. கடலுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கோட்டையின் அமைவிடத்தையும் அமைப்பையும் கருத்தில் கொண்டால் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அக்கால தமிழர்களின் தனியரசு எவ்வளவு முன்னேற்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் இருந்தது என்பதை விளங்கிக் கொள்ளமுடியும். ஏனெனில் இக்கோட்டையிலிருந்து இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே செல்லும் கப்பல்களை அவதானிக்கலாம் என்பதுடன் எதிரி படைகளின் உள்நுளைவையும் தடுக்கலாம். யாழ் குடாநாட்டின் வெளித் தொடர்புகளினைக் கட்டுப்படுத்தக் கூடிய கேந்திர ஸ்தானம் ஒன்றில் இது அமைந்துள்ளது. இவ்விடத்தின் முக்கியத்துவத்தை போர்த்துக்கேயர் உணர்ந்தமையினாலேயே பிற்காலத்தில் இதனையண்டிய பகுதியில் “ஹிமன்கில்” கடல் கோட்டையை கட்டினர்.

                   
    
                                     இவ்வாறு மதியூகத்துடன் சிறப்புற கரையோரப்பகுதிகளை நிர்வகித்து வந்த விஷ்ணு புத்திர வம்சத்தின் கடைசி அரசனே வெடியரசன் எனப்படுகின்றான். போர்த்துக்கேயருடனான சண்டைகளின் போது இவனது எதிர்ப்பு அபாரமாக இருந்தது. முதலில் பாரம்பரிய முறைகளை பின்பற்றி போரில் ஈடுபட்ட இவன்  பின்னர் வெடிவைக்கும் முறைகளை கொண்டு போர்த்துக்கேயர்களின் கப்பல்களை தகர்த்ததால்  வெடியரசன் என்று அழைக்கப்படலானான் என சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதுமுண்டு. அதைவிட வெடியரசனைப்பற்றியும் அவனது கோட்டையை பற்றியும் போர்துகீசரின் குறிப்புகளிலும் கூறப்படுள்ளதாக அறியவருகிறது.
                         
                             விஷ்ணு புத்திர வம்சம் மற்றும் வெடியரசன் பற்றியும் வெடியரசன் கோட்டை பற்றியும் வரலாறு கூறும் தகவல்கள் இதுதான்.



  இந்த விடயங்களை ஒரு வழியாக தேடியறிந்த பின்னர் நாங்கள் நாலுபேரும் ஊர்காவற்றுரையை சென்றடைந்தோமா ஒரு சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டவாறே ஊர்காவற்றுரையின் இடங்களைப் பற்றி மெல்ல மெல்ல விசாரிக்கலானோம். அந்த கடையில் நின்ற பெரியவரும் பிற இடங்களை பற்றி தெளிவாக கூறினார். ஆனால் வெடியரசன் கோட்டையை பற்றி நாங்கள் கேட்டபோது அப்படியொரு கோட்டை முதலிங்கு இருந்ததாக தான் அறிந்திருந்ததாகவும் தற்போது அப்படியொரு இடமே இங்கில்லை என்றும் கூறிவிட்டார். [கொய்யால......உனக்கு வியாபாரமாகணும் எண்டதுக்காக ஒரு பெரிய கோட்டையையே வரலாற்றிலிருந்து தூக்கிப்புட்டியே..... இதுக்கு எதுக்கு வெள்ளையும் சுள்ளையுமா அலையணும்.....பயபுள்ள தெரியல்ல என்றா தெரியல்லை என்று சொல்ல வேண்டியதுதானே......]



                 நாங்கள் வேறு பல இடங்களுக்கு முன்னர் சென்று  நம்மவர்கள் வரலாற்றை வாழ வைக்கும் விதத்தை அறிந்திருந்தபடியால் அந்த கடைக்காரர் சொன்னதை அப்படியே நம்பி விட்டோம். இருந்தாலும் இருக்கட்டும் எண்டு சந்தியில் நின்ற ஒருதருட்ட கேட்கலாம் எண்டு கிட்டப்போனா ஆள் நல்ல வாட்டசாட்டமா கையில ஒரு கோடலியோட உட்கார்ந்துகிட்டிருந்தார். கிட்டப்போனதும் தான் தெரிஞ்சுது அண்ணாத்தைக்கு நல்ல மப்பு. நமக்கு இருக்கிற காலத்துக்கு இது ரொம்ப முக்கியம் என்று திரும்பலாம்னா “டோய்... தம்பி என்ன வந்துட்டு திரும்பிறாய் என்ன விசயம்.....???” அண்ணாத்தை சொல்லிகிட்டே கோடலியை பிடிச்சிட்டார். கேள்வி கேட்ட விதத்துக்கும் கோடலிக்கும் எங்க தலைக்கும் ஏதோ நூறு ஜென்மத்து உறவு மாதிரி இருந்துச்சா.... சரி எதுக்கு வம்பு “அண்ணை இங்கை வெடியரசன் கோட்டை எண்டு ஏதாவது இருக்குதோ....????” [அவனவன் தெளிவா இருந்தாலே வரலாறு பற்றி கேட்டா மப்படிச்ச மாதிரி ஆகிடுறான்.... அண்ணாத்தை வேறை முழுமப்புல நிக்கிறாரு.... எந்தநேரம் என்ன நடக்குமோ..... என்ன பதில் வருமோ......இல்லை கோடலி தான் வருமோ...?? எண்டுகிட்டு நாலுபேரும் ஆளையாள் பார்த்துகிட்டே நிண்டோம்] “ஒஹ்..... தம்பி நீங்க பழம்கோட்டையை கேட்கிறியளே........ வெடியரசன் கோட்டை எண்டு சரித்திர பெயர் எல்லாம் சொன்னா இங்கை ஒருத்தருக்கும் தெரியாது அப்புமார்.......” எண்டாரம்பிச்சு ஒரு வழியா வழியைக்காட்டினார். மப்புல நிண்டாலும் தப்பாம வரலாற்றை அறிஞ்சிருந்த அந்த மனிதரை நினைக்கும் போது ஒரு வித பயம் கலந்த சந்தோசம் வரத்தான் செய்தது.



                                 உண்மையில் வெடியரசன் கோட்டை எண்டபெயரில  நாலு செங்கற்களை அடுக்கி வைச்சிருக்கும் எண்டு தான் நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். ஆனால் கோட்டையை அடைஞ்சதும் தான் கோட்டையில் ஒரு சில சிதைவுகள் இருந்தாலும் பழைய கோட்டையின் தற்போதைய பிரதிபலிப்பாக வியப்பூட்டும் விதத்தில் இருந்தது கோட்டை. நானும் நண்பன் நீதுஜனிடம் “நீது நான் கோட்டை எண்டபெயரில ஏதோ செங்கல் தான் இருக்கும் எண்டு நினைச்சன்..... கோட்டை இப்பிடி இருக்கும் எண்டு எதிர்பார்க்கவே இல்லை நீ எதிர்பார்த்தியா மச்சி.....???” அதுக்கு “ஹ்ம்கூம் கோட்டை இப்பிடி இருக்கும் எண்டு நான் எதிர்பார்க்கல்ல அதேநேரம் இதையும் எதிர்பார்க்கல்ல கீழை பார்த்து நட.....” எண்டு பதில் வந்திச்சு. அப்புறம் தான் குனிஞ்சு கீழை பார்த்தா நம்மாக்கள் தங்கட சாணத்தால இரண்டடிக்கு ஒரு இடத்துல பிள்ளையாரை பிடிச்சிருந்தார்கள். அது போதாது எண்டு இடையிடையே சிறுநீர் வேறு கழித்திருந்தார்கள். நாங்கள் இந்த அதிர்ச்சியில் இருக்கும் போது அவசரமாக சையிக்கிளில் வந்த இரண்டு பேர் சையிக்கிளை கோட்டை மதிலோட சாய்துப்போட்டு கோட்டையில் அகழிஇருந்த இடத்துக்கு சென்று அகழிக்கு நீர்பாய்ச்சும் முகமாக சிறுநீர்பாய்ச்சத் தொடங்கிவிட்டனர். [அண்ணைமாருக்கு  எவ்வளவு கடமை உணர்ச்சி அகழிக்கு நீர் பாச்சுரதில......... எங்கயோ இருந்து சையிக்கிளில அவசரமா வந்து  நீர் நிரப்புகிறார்கள்...... உங்களை மாதிரி ஊருக்கு  நாலு பேர் இருந்தா தமிழண்ட  பெருமைய எவனாளையும் அழிக்க முடியாதுல.............. இது கூட வரலாற்றில வரும்.......... கருமம் பிடிச்சவங்களா.....]
             
                                  ஆம் கோட்டை வேறு கடற்கரைக்கு பக்கத்தில் இருக்கிறதால் இந்தப்பகுதி மக்களுக்கெல்லாம் வெடியரசன் கோட்டை ஒரு சகல சிறப்புக்களும் மிக்க மலசல கூடமாகமட்டுமே திகழ்ந்துவருவதை கண்கூடாக காணமுடிந்தது ஒரு பற்றைகாடாக இக்கோட்டையை பயன்படுத்துவதற்காகத்தான் இங்குள்ள பற்றைகளை கூட வெட்டவில்லை போலுள்ளது.   ஒரு சமயம் தென்னிலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று பாருங்கள் நண்பர்களே வரலாற்றை எவ்வளவு அழகாக பேணுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும். நம் வரலாற்றை நாம் பேணுவதை விடுத்து பிறர் மீது குறை கூறுவதில் எவ்வித பயனும் வரப்போவதில்லை. தமிழரின் வரலாற்றை கூறும் வெடியரசன் கோட்டையை இப்பகுதி மக்கள் நினைத்தால் சிறப்பாக பேணமுடியும் ஆனால் அவர்களின் பார்வையில் இக்கோட்டை சிறப்பான மலசலகூடமாகவே தென்படுகிறது போலும்.
                               
                                   போனபதிப்பை பார்த்துவிட்டு ஒரு சிலர் கேட்டிருந்தார்கள் நீங்கள் இப்படியெல்லாம் கூறினால் கோப்பாய் கோட்டை வரலாற்றில் வந்துவிடுமா..?? என்று ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே கோப்பாய் கோட்டையும் சரி வெடியரசன் கோட்டையும் சரி ஏற்கனவே வரலாற்றில் இடம் பெற்றவைதான் ஆனால் நாம் தான் அவ்வரலாற்றை அறியவில்லை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை நம் வரலாற்றை நாமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.கோப்பாய் கோட்டையை மனிதர்கள் அறிந்திருந்ததை விட மாடுகள் அறிந்திருந்தன. ஆனால் வெடியரசன் கோட்டையை மனிதர்கள் அறிந்திருந்தார்கள் சரித்திர கோட்டையாக அல்ல ஒரு அவசர மலசல கூடமாக.....

                                                                     ................தொடரும்...............

இதன் அடுத்த பதிவிற்கு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்