போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-05 

போன பதிப்பில் அடிமைகளுக்காக போராடிய அபாலிஷனிஸ்ட் எனும் இயக்கத்தையும் அதற்கு உறுதுணையாய் நின்ற காரிசன் மற்றும் டக்ளசைப் பற்றி பார்த்தோம். அப்பதிவை வாசித்து விட்டு தொடர இங்கே கிளிக்.                 இவ்வாறு காரிசனும், டக்ளசும் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமெரிக்க மக்களுக்கு அடிமைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவுபடுத்த தொடங்கின.

                                            தங்களை போன்ற ஓர் அடிமை தப்பித்ததும் அல்லாமல் தமக்காக எல்லாம் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுவது கறுப்பினக் கூட்டத்தாரிடையே டக்ளசை தங்கள் மனச்சாட்சியின் உருவமாக பார்க்க வழிவகுத்தது. 1840 ஆம் ஆண்டுகளின் பின்னர் எல்லாம் கருப்பினத்தாருக்கும் அடிமைகளுக்கும் டக்ளஸ்தான் ஒரு நடமாடும் கடவுளாக தென்பட்டார். இவ்வாறு ஆங்காங்கே தலை தூக்கிய “அடிமை முறையை ஒழிப்போம்” எனும் இக்கோசம்தான் படிப்படியாக வளர்ந்து 1860  ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  அடுத்த அமெரிக்க அதிபர் யார்..?? எனும் கேள்விக்கு பதிலாக அமைந்தது. இக்காலகட்ட தேர்தலில் அடிமைகள் பிரச்சனைதான் முக்கிய செல்வாக்கை செலுத்திய காரணத்தால் பிரடரிக் டக்ளஸின் ஆதரவை பெற்ற கட்சிக்கு கூடிய ஆதரவு மக்களிடையே இருக்கும் என கருத்துக்கள் நிலவின. இதையறிந்திருந்த டக்ளசும் “அமெரிக்க அதிபர் யாராயினும் அடிமைகளுக்காக உழைக்க அவர் தயார் என்றால் அவருக்காக உழைக்க நான் தயார்..” எனக் கூறியிருந்தார். 
                         
                    இதற்கேற்றாப் போல “அடிமைகளுக்கு நல்லது செய்யப்படும்” எனும் வாக்குறுதியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட  குடியரசுக்கட்சியின் வேட்பாளராக நின்றவர்தான் ஆபிரகாம் லிங்கன். அடிமைகளுக்கு நல்லது செய்வோம் எனும் அடிப்படையில் டக்ளஸின் ஆதரவையும் கோரியிருந்தனர் இக்கட்சியினர். இதை ஏற்றுக்கொண்டு டக்ளசும் , அபாலிஷனிஸ்ட்களும் இக்கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க தொடங்கியிருந்தனர். இவ்வாறு வட அமெரிக்காவில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் தென்னமெரிக்காவிலோ நிலமை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது.
                    
                                                  இவ்வாறு  அடிமைகளை ஆதரித்து பிரச்சாரங்கள் செய்வதும் அவர்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுவதுமாக வடஅமெரிக்கா இருந்தால் பெருமளவு விளைநிலங்களையும் அதிகளவு பிரபுக்களையும் கொண்ட அமெரிக்காவின் தென்மாநிலங்களில் “அடிமைகளை விடுவிப்போம்” எனும் கோசம் துளியளவில் கூட எழாதவாறு வலுக்கவனமாக பார்த்துக்கொண்டனர். ஏனெனில் ஏராளமான விளைநிலங்களில் அடிமைகள் மூலம் கிடைக்கும் பெருமளவு இலாபத்தையும் விளைச்சலையும் அடிமை முறையை ஒழிப்பதன் மூலம் இழக்க தென்மாநில மக்களும் பிரபுக்களும் முற்றிலும் தயாராக இருக்கவில்லை. இதனால் “அடிமைகளுக்கு விடுதலை” எனும் சொல்லே அவர்களுக்கு காதில் ஈயத்தை காச்சி ஊற்றியது போல்தான் இருந்தது. காலம் காலமாக தம் காலடியில் நசுக்கப்பட்டு தமக்காக உழைத்த அடிமைகளை விடுவிக்க அவர்கள் துளியளவில் கூட விரும்பவில்லை. இதன் காரணமாக தம் காலடி நாய்களான அடிமைகளுக்கு ஆதரவான ஒருவர் அமெரிக்காவின் அதிபர் ஆவது ஓட்டு மொத்த அமெரிக்காவுக்கும் மிக்கப்பெரும் அவமானம் என்று கருதிய நிலையில் ஆபிரகாம்லிங்கனின் தோல்விக்காக தென்மாநில மக்களும் பிரபுக்களும் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினர். 
                 
                        மேற்கூறப்பட்ட பிரச்சனைகள் ஒருபுறமிருக்க அடிமைகள் மத்தியில் தங்கள் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வும் தங்கள் வாழ்வின் நிலை குறித்த வெறுப்பும் மேலோங்கியிருந்தது. இதனால் தங்களை காலடியில் போட்டுமிதிக்கும் தம் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைத்துக்கொண்டிருக்கும் மேட்டுக்குடியினரின் மேல் கடும் விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் இருந்தனர் அடிமைகள். சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் பண்ணையார்களை பிளந்து கட்டவும் தயாராக இருந்தார்கள். இந்நிலையில் இவர்கள் இருந்தபோதுதான் பெருமளவிலான அடிமைகள் வடமாநிலங்களுக்கு தப்பிச்சென்று விடுதலை பெற்றதும் தம் விடுதலைக்காக போராடுவதையும் மெல்ல மெல்ல அறியத்தொடங்கினர். ஏற்கனவே தங்கள் முதலாளிகளின்மேல் கடும் கோபத்துடன் இருந்த அடிமைகளுக்கு இச்செய்திகள் பற்றிய தெளிவு ஏற்பட தங்கள் கோபத்தை தம் செயற்பாடுகள் மூலம் சிறிதுசிறிதாக காட்டத்தொடங்கினர். 

                       சாதாரண கோபம் அல்ல அது எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்கள் இரத்தத்தில் ஊறிப்போயிருந்த ஆத்திரமும் விரக்தியும் சேர்ந்து வெளிப்பட்ட போது உண்மையிலேயே தென்மாநில அமெரிக்க மக்கள் மட்டுமல்ல வடமாநில மக்கள் கூட பயந்துதான் போனார்கள். காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் விழித்துக்கொண்டு எதிர்த்து நின்றால் அடக்கி ஆண்டவர்கள் அலறி ஒடுவதுதானே உலகநியதி. “அடித்தால் திருப்பியடிப்போம், எதிர்த்தால் உயிரைப்பறிப்போம்,போராட்டமில்லாமல் விடுதலை இல்லை” இதுதான் அன்றைய அடிமைகளின் நிலையாக இருந்தது.  ஒரு பண்ணையின் அடிமைகள் தப்பிக்கத்திட்டம் போட்டுவிட்டார்கள் என்றால் அந்தப்பண்ணைக்காக கடுமையாக உழைத்தார்கள் வழமையை காட்டிலும் விளைச்சல் அதிகம் வரும் என்று முதலாளிகள் மகிழ்ந்து கொண்டு அறுவடைக்கு தயாராகும் நேரம் பார்த்து அந்த விளைநிலங்களுக்கு தீயை மூட்டிவிடுவர் அடிமைகள். இதனால் கடுப்பாகும் முதலாளிகள் அடிமைகளை தண்டிக்க முற்படும் போது திருப்பியடித்ததுடன் மட்டுமல்லாமல் பண்ணையாளர்களை கொன்று போட்டதுடன் அப்பண்ணை முழுதிற்கும் தீமூட்டி சர்வநாசம் செய்துவிடுவார்கள். தப்பி வரும் வழியில் எதிர்ப்பட்ட பண்ணைகளையும் தீமூட்டி விடுவார்கள். 
               
                             அடிமைகள் குழு ஒன்று தப்பித்து விட்டது என்றாலே எத்தனையோ ஏக்கர் விளைநிலங்களும் பண்ணை வீடுகளும் நாசமாகியிருக்கிறது, பல முதலாளிகள் கொல்லப்படிருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லாமலே விளங்கி கொள்ளக்கூடியதாக இருந்தது அன்றைய நிலைமை. இதுமாதிரியான பல வன்முறைச் சம்பவங்கள் கெண்டகி, மேரிலாந்து, விர்ஜீனியா போன்ற மாகாணங்களில் ஏராளமாக நடந்தன. இவ்வாறாக அடிமைகள் முதலாளிகளை கொல்வதும் , பண்ணைகளை கொளுத்துவதும் காரிசன் உட்பட பல வட மாநில அடிமைகளின் சுதந்திரத்துக்காக போராடிய வெள்ளையர்களுக்கு பிடிக்கவில்லை. அடிமைகளுக்கு சுதந்திரம் அவசியம் ஆனால் அதை அமைதியான முறையிலேயே போராடிப்பெறவேண்டும் என்பதே காரிசனாதியினரின் வாதமாய் இருந்தது. ஆனால் அடிமைகளின் மனநிலையை நன்கு அறிந்திருந்த பிரடரிக் டக்ளசோ அடிமைகளின் செயற்பாடுகளை மனபூர்வமாக ஆதரித்ததுடன் “போராட்டமில்லாமல் சுதந்திரம் இல்லை” என அடிமைகளின் உணர்வுகளை மேலும் தூண்டி விட்டார். இதனால் காரிசனுக்கும், டக்ளசிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி பிரிந்திருந்தாலும் இரண்டு கட்சியினருமே அடிமைகளின் சுதந்திரத்தில் உறுதியாக இருந்தனர். “...........எங்கள் வலியை நீங்கள் அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சொந்தமாக அனுபவிக்காத உணர்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்...........” என்பதே தப்பி வந்த அடிமைகளின் வாதமாக இருந்தது. ஆம் எந்த ஒரு இனத்தினதும் கொடுமைகளையும் வேதனைகளையும் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாதவர்களே அவ்வினத்தாரின் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் எதிராக இருக்கின்றனர். ஆம் போராட்டமில்லாமல் விடுதலை இல்லைதான்.
                     
                                     அடுத்த பதிப்பில் அமெரிக்க உள்நாட்டுயுத்தம் பற்றியும் அதன் பிரச்சனைகள் பற்றியும் பார்க்கலாம். அடுத்த பகுதியில் முற்றும்.
                                     
                                                                                         ...............தொடரும்..............
இதன் அடுத்த பதிவிற்கு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்