நடராஜர் - 6 - மதங்கள் கடந்த உன்னதம்







6: மதம் தவிர்த்த பார்வை
இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் உன்னதமான கலாசிருஷ்டியாக தெரியக்கூடியது நடராஜர் உருவம். எத்தனையோ கண்ணோட்டத்தில் எத்தனையோ உன்னதங்களை தன்னகத்தே கொண்டது அது. இறைவன், கடவுள் என்கிற பார்வையை தவிர்த்து, ஒரு இந்து அல்லாதவராக நாம் அதை பார்ப்போம்.
கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம்

6.1: சிற்பக்கலை

நடராஜர் சிற்பமானது சிக்கலான வடிவமாகும். சிற்பம் அமைக்கும் மூன்று முறைகளில் சித்திர முறைப்படியே நடராஜர் உருவம் அமைக்கப்பட வேண்டும். அதாவது முப்பரிமானத்திலே, முன்னும், பின்னும் பார்க்கக்கூடிய மாதிரி. திருவாசி வளைவு, தூக்கிய நான்கு கரங்கள், தூக்கப்பட்ட இடக்கால், விரிந்து பறக்கும் சடை, மற்றும் தோலாடைகளோடு ஒரு சிற்பத்தை முப்பரிமானத்திலே அமைப்பது என்பது ஒரு சவால். அதுவும் முழு உடலுமே ஒற்றைக் காலின் ஆதாரத்தில் நிற்பதாக அமைக்கவேண்டும். கிடை மட்டத்தில் ஐந்து சம பாகங்களாக பிரித்தால், உச்சியிலுள்ள இரண்டு பாகங்களுக்குள்ளேயே தலை, நான்கு கைகள் என்பன வருமாறு அமைக்க வேண்டும். (சடை, தோலாடை ஆகியவற்றின் மூலமாக திருவாசியில் ஆதாரம் கொடுக்க முடியும் எனினும், அவ்வாறு அல்லாது, நேரடியாக காலின் ஆதாரத்தில் மட்டுமே நிற்பதாக அமைப்பதே சிறப்பானதாகும்.)

சிற்பத்திலே ஆடலின் வேகம் காட்டப்பட வேண்டும். சடை, ஆடைகள், தீ ஆகியவற்றின் மூலமாக இது காட்டப்படும். கல்லிலே இதனை போளிவது சாத்தியமற்றது. எனவேதான் பெரும்பாலும் உலோக வார்ப்பு வேலையாகவே இது செய்யப்படுகிறது. சோழர்காலத்தில் உலோக வார்ப்பு வெளியானது உச்ச உன்னத நிலையிலே இருந்தது என்பது அவர்கள் அமைத்த ஏராளமான சிற்பங்களிலிருந்து தெரிகிறது. எனினும், வார்ப்புக்கு வேண்டிய மெழுகுச் சிலையையும் செய்வது சுலபமில்லை. எனவே சிற்ப ரீதியாகப் பார்த்தால், இது ஒரு தமிழர் சாதனை. அதனாற்றான் ஏராளமான சோழர்கால வெண்கல, ஐம்பொன் சிலைகள் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளன.

6.2: நடனம்.

ஏற்கெனவே சொல்லப்பட்ட மத ரீதியான நடன அற்புதங்களோடு, ஒற்றைக் காலில் சமநிலையில் அத்தனை உக்கிரமாக ஆடும் நிலை நடனத் திறமையின் உச்சம் எனலாம். மொத்தம் தாண்டவங்கள் நூற்றெட்டு. அவற்றில் உச்ச நடனம்தான் ஆனந்த தாண்டவம் எனப்படும் தாண்டவம். நூற்றெட்டு தாண்டவ வடிவங்களிலும், நடனத்தின் அரசன் எனப் பொருள்படும் பதத்தால் அழைக்கப்பட்டது இது மட்டுமே.

பரத முனிவரால் எழுதப்பட்டதால் பரத நாட்டியம் எனப்பட்டது என்பதை விட, பரத நாட்டியத்தை எழுதியவரே பிற்காலத்தில் பரத முனிவர் என அழைக்கப்பட்டார் என்பதே பொருத்தமான வாதமாக இருக்கிறது. பரதநாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள் அனைத்தையும் காட்டும் வடிவமாக நடராஜர் உருவம் இருக்கிறது.

பத்தொன்பது தலைக்குறிகளுள் முதலாவதான சமம் – சமநிலையே நடராஜரது தலைக்குறியாகும். எட்டுப் பார்வைகளுள்ளும் முதன்மையான சமம் – நேர்ப்பார்வையே பார்க்கிறார் சிவன். எனினும், நடராஜர் உருவத்தை நிமிளிதம் என்கிற தியானப் பார்வையுடனும் அமைக்க முடியும். மேலும் ஸ்நிக்தம் என்கிற உப பார்வை வகையான குளிர்ந்த பார்வையும் நடராஜருடையதாகலாம்.
மேலும் இவ்வாறானதான நாட்டிய சாஸ்திரத்தின் பல முதன்மைகளை நடராஜர் திருவுருவத்தோடு பொருத்தலாம். நடனத்துக்கு அடிப்படையான இசை, பதம், தளம் ஆகியவையும் சிற்பத்திலே காட்டப்படுகின்றன. சமநிலை, நளினம், வேகம், பாவம் அனைத்தையும் லாவகமாகப் பிரயோகித்தபடி ஆடுகிறார் நடராஜர்.


ஆதிகாலத்திலே சிவன் என்கிற கடவுளை வழிபட்டவர்களும் கற்றவர்க்களுமான ஒரு முனிவர் கூட்டம், சிவ வழிபாடுகளின்பொது ஆனந்தத்தில் கூத்தாடி இருக்கலாம். அந்தக் கூத்துக்கள் காலப்போக்கில் அவர்களால் தொடர்ந்து ஆடப்பட, அவற்றுக்கு ஒரு வடிவம் கிரைத்திருக்கலாம். அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பண்புள்ள அவர்கள், அந்தக் கூத்து வடிவமும் இறைவன் தந்ததென்பதால், அவன் போதித்ததாக, அவன் ஆடுவதாக அந்தக் கூத்து  வடிவத்தை விரிவாகப் பதிவு செய்திருக்கலாம். ஏனெனில் ஒரே ஒருவர் கண்டுபிடித்த நாட்டிய வடிவமாக அத்தனை லாவகமான, நெறிப்படுத்தப்படுத்தப்பட்ட, யோக நிலைகள் நிறைந்த பண்பட்ட வடிவத்தை கொள்ள முடியாது. காலத்துக்கு காலம் அது விருத்தியடைந்து இப்போது உள்ள உன்னத நிலையடைந்திருக்கலாம். முற்காலத்திலிருந்தே சிவனின் அருள் என ஆடற்கலை நம்பப்பட்டதால், அது இன்றளவும் தொடர்கிறது. அதற்கு ஆதாரமாக நடராஜர் உருவம் காட்டப்படுகிறது.


6.3: பிரபஞ்ச இயக்கவியல் தத்துவம்

பிரபஞ்சமானது முட்டை வடிவினதாக இருக்கிறது என இந்துக்கள் நம்பினார்கள். எனவே நீள்வளைய வடிவமான திருவாசியை அமைத்து, அதை பிரபஞ்சத்துக்கு உருவகித்தார்கள். அக்கினிகளால் வெளிப் பிரபஞ்சம் காட்டப்பட, அதனுள்ளான ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தின் குறியீடாக நடராஜர் திருவுருவம் உள்ளது. பஞ்சபூதங்களும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம். (உண்மையில் தென்னிந்திய ஆதிக்குடிகள் நான்கு பொத்தான்களை மட்டுமே வரையறுத்திருந்தார்கள். அதுதான் ஏற்கக்கூடியதும்கூட. ஏனெனில் பின்னாளில் ஆரியர்கள் வானத்தை பூதமாக அறிமுகப்படுத்தினாலும், வானம் என்று தனியாக ஒன்றும் இல்லை என்பது நாம் அறிந்தது.) நீர் (கங்கை) நிலம் (தளம்), காற்று (அசையும் சடை, ஆடைகள்) மற்றும் நெருப்பு (கையில்) ஆகியவை பூதங்களை காட்டுகின்றன. பின் பெருவெளியை ஆகாயத்தின் குறியீடு என்கிறார்கள். ஆனால், பண்டைத் தமிழரின் நான்கு பூதங்கள் மட்டுமே நேரடியாகக் காட்டப்பட்டுள்ளன.

இந்த ஆனந்த தாண்டவத்தினை பிரபஞ்சத்தின் சீரான இயக்கமாக எடுத்துக்கொண்டால், உக்கிரமாக சீரற்று ஆடும் ஆட்டமாக இது மாறினால் பிரபஞ்சத்தின் சீர்த்தன்மை கெட்டுவிடுகிறது. அதுவே ஊழித் தாண்டவம். பிரபஞ்சத்தின் குலைவு.


இப்படியாக எந்தத் தத்துவத்தை வேண்டுமானாலும் விளக்கக் கூடிய வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது. உதாரணமாக சக்தி என்கிற ஒன்றை எடுத்துக்கொள்வோம். சிவனின் மனைவியே சக்தி என்கிற வடிவம். அதை குறிக்கவே இடது காதிலே குழை அணிந்துள்ளார். அடிப்படை பொறிமுறை சக்திகள் இரண்டு. இயங்கும் சக்தி (இயக்க சக்தி) நிலையான சக்தி (அழுத்த சக்தி) இந்த இரண்டையுமே சிவனின் இரண்டு கால்களும் காட்டுகின்றன. மேலே பாயும் நீர், அசையும் காற்று, எரியும் நெருப்பு என்கிற பண்டைக்காலத்திலிருந்து  பயன்பட்டு வரும் இயற்கையின் மூன்று சக்தி முதல்களும் காட்டப்பட்டிருக்கின்றன.

நடராஜர் சிற்பத்தை பார்த்தால் அந்த உடலானது ஓம் என்கிற வடிவத்திலே அமைந்திருப்பதை காணலாம்.

இப்படியாக மதங்கள் கடந்து பார்த்தாலும், மதத்தின் விழியால் பார்த்தாலும், கலையாகவும், கடவுளாகவும், தத்துவமாகவும் நம்மிடம் எஞ்சியுள்ள ஆதி முன்னோரின் சொத்தே நடராஜத் திருவுருவம். நமது பெருமிதம். தமிழரின் கர்வம். வணங்குவோருக்கு வெறும் கடவுள். வணங்காதோருக்கோ தலைவன். ஊழித் தலைவன், ஆடற் தலைவன், தானத் தலைவன்.


முதல்வன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்