எரிந்த யாழ் நூலகமும் சிதைந்த பண்பாடும் - இனபேதத்தின் உச்சம்


புதிய நூலகத்திற்கான இடத்தெரிவும் கட்டிட அமைப்பும் 


[இதன் முன்னைய பதிவிற்கு இங்கே] 

யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை என நூலகத்தின் உருவாக்கத்திற்காக தொடங்கப்பட்ட இச்சபையின் தலைவராக நகரபிதா சாம் சபாபதி அவர்களும் உபதலைவராக லோங் சுவாமிகளும் இருந்து கடுமையாக உழைக்கலாயினர். பல இடங்கள் நூலகத்தின் அமைவிற்காக பலதரப்பட்ட சிக்கல்களின் மத்தியில் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக அரசினர் நகரநிர்மான நிபுணர் திரு.வீரசிங்கா அவர்களின் தெரிவிற்கமைய தற்போது நூலகமுள்ள பழைய முற்றவெளி எனும் இடம் தெரியப்பட்டது. நல்ல நேரத்தில் லோங் சுவாமிகளின் ஆசியுடன் சைவாசாரமுறைப்படி அத்திவாரம் வெட்டி 29/03/1954 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அன்றைய நகர மேயர் சாம் சபாபதி, வணக்கத்திற்கு உரிய தந்தை லோங் சுவாமிகள், பிரித்தானியத்தானிகர் சேர்.செரில்சையஸ், அமெரிக்க தூதுவர் எச்.ஈ.பிலிப்கிகுறோவ், இந்தியத்தூதுவரின் முதற் செயலாளர் ஸ்ரீ சித்தார்த்த சாரதி, போன்றோர் திரை நீக்கம் செய்து வைத்தார்கள். 
                              
                            அன்றைய நாளில் நூலகத்தின் வளர்ச்சிக்காக அமெரிக்க உதவியாக 22000 டொலர்கள் கிடைத்தது. அன்றைய காலப்பகுதியில் இலங்கை பெறுமதிக்கு  104,000 ரூபா பணமாக அது இருந்தது.  இந்திய அரசு தன்பங்கிற்கு ரூபா.10,000 நல்கியது. இவ்வாறு புதிய நூலகத்தை ஸ்தாபிப்பதில் பலரது உதவிகளும் உழைப்பும் முதலிடப்பட்டது.
                         
                 இவ்வாறு புதிய நூலகத்திற்கான ஆரம்ப வேலைகள் சிறப்புற இடம்பெறுகையில் மாடிக்கட்டடத்தில் இருந்த நூலகத்தில் குறிப்புரை எழுதும் பெரிய பதிவு புத்தகம் ஒன்று வைக்கப்பட்டு வாசகர்கள் தாங்கள் வாசித்து கேட்டறிந்த சிறந்த புத்தகங்களின் பெயர்களை அதில் எழுதும் படி பணிக்கப்பட்டு அப்புத்தகங்களில் சிறந்தவை புதிய நூலகதிற்காக வாங்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் 1000 ரூபா வருடமொன்றிற்காக நூலகதிற்காக ஒதுக்கிய நகரசபை கூட படிப்படியாக இத்தொகையை 20000  , 35000 என அதிகரிக்கத்தொடங்கியது.
     
                               இதைவிட அன்றைய யாழ் சமூகத்தில் தங்கள் குடும்பத்தில் கல்விகற்ற பெரியவர்கள் இறந்தபோது அவர்களின் நினைவாக நூல்நிலையத்திற்கு ஏராளமான புத்தகங்களை வழங்கும் நற்பழக்கமும் இருந்தது. இன்றும் இப்பழக்கம் காணப்பட்டாலும் அன்று அதிகளவில் இப்பழக்கம் காணப்பட்டது. ஏனெனில் யாழ்பாண மக்களை அறிவுசார்ந்த சமுதாயமாக  கட்டியெழுப்ப அன்றைய ஒவ்வொரு குடிமகனுக்கும் இருந்த அக்கறை போற்றத்தக்கது. இவ்வாறு மாடியில் இயங்கிய நூலகத்தில் நூல்களும் வாசகர்களும் அதிகரிக்கத்தொடங்க நூல்நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவத் தொடங்கியது. எனவே புதிய நூலகத்திற்கான வேலைகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
                        
                                                எனவே நூலக அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்த சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் திரு.கே.எஸ்.நரசிம்மன்  நூலகத்தை பொருளாதார வசதியை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டி பூரணப்படுத்தும் திட்டத்தை முன்வைத்து அதன்படியே வேலைகளை நிகழ்த்துவித்தார். நூலக நிதியுதவிக்காக 1952,1954,1959,1963  ஆம் ஆண்டுகளில் கானிவல் களியாட்ட விழாக்களும் அதிஷ்ட இலாபச்சீட்டிழுப்புக்களும் நடைபெற்றன. கானிவல் விழாக்களிற்கான நிகழ்ச்சியாளர்களை கொழும்பிலிருந்து கொண்டுவரும் செலவை உணர்ந்து கொண்ட உள்ளூர் லொறி ஓட்டுனர்கள் நூலகத்தின் அவசியத்தை உணர்ந்து தாமாக முன்வந்து உதவினர். அந்த வகையில் நூலகத்தின் அவசியத்தையும் எதிர்கால சமூகத்திற்கு அறிவு பூர்வமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதிலும் கீழ் மட்ட மக்கள் கூட எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பது தெளிவு.  1959 ஆம் ஆண்டு கானிவல் முடிந்ததும் நூலக கட்டட வேலைகளை வேகமாக நடத்தி நிலமண்டபத்தின் ஒரு பகுதியை ஓரளவிற்கு கட்டி நிறைவேற்றியதும் 11/10/1959 இல் அன்றைய நகர மேயர் திரு.அல்பிரட் தங்கராசா துரையப்பா அவர்களால் புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
                                   
                                                                                                      அன்றைய நூலகத்தில் 16000 நூல்கள் இருந்த அதேநேரம் ஏராளமான சஞ்சிகைகளும் இருந்தன. இதை விட பிரமாண்டம் என்னவென்றால் லண்டனில் வெளியான நாளாந்தப் பத்திரிகைகள் விமானங்கள் மூலம் வந்ததுதான். கொழும்பிலுள்ள புத்தகக்கடை வைத்திருக்கும் தமிழர்கள் தங்கள் கடைக்கு வரும் புத்தகங்களை இலவசமாக நூல்நிலையத்திற்கு விநியோகித்தனர்.
         
                               இதை விட நூலகத்திற்கு சிறப்பு சேர்த்தது என்னவென்றால் 1672 ஆம் ஆண்டில் பிலிப்புஸ்பல்டியஸ் என்பவரால் எழுதப்பட்ட இலங்கைவரலாறு ,1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னனால் சிறைவைக்கப்பட்ட ரொபர்ட் நொக்ஸ் எழுதிய இலங்கைவரலாறு, 1586 இல் வெளியான கத்தோலிக்க பெரியார்களைப்பற்றிய வரலாற்று நூல் போன்ற காலத்தால் முற்பட்ட புத்தகங்கள் பல இருந்ததுடன் சித்தவைத்தியம், பள்ளுப்பாடல்கள் போன்றன கொண்ட ஒலைசுவடிகளும் ஏடுகளும் இருந்தன என்பதுதான்.

இரண்டு நூலகங்கள் இணைந்தன  


யாழ்பாண நாலாம் குறுக்குத்தெருவில்  அக்காலத்தில் அமெரிக்க அரசின் அனுசரணையுடன் இயங்கிய “தகவல் நூல்நிலையம்” என்ற ஒரு நூலகம் இருந்தது. உலக நாடுகளில் வெளியாகும் நல்ல நூல்களின் விபரங்களை கொண்ட ஒரு பதிவேடும் பல பெறுமதிமிக்க புத்தகங்களும் இங்கே இருந்தன. அதைவிட வராந்தோரும் அறிவுத்துறை சார்ந்த திரைப்படக்கண்காட்சியும் இடம்பெறும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்களும், பெறுமதியான தளபாடங்களும் இருந்தன இந்த நூலகத்தில். இங்கிருந்த நூல்களும் தளபாடங்களுமாக அன்றைய பெறுமதியில் ரூபா இரண்டு இலட்சம் மதிப்பில் இருந்தன. அமெரிக்க அரசு இந்நூலகத்தை இலங்கையிடமே கையளித்து விட எண்ணிய போது அப்படியே கண்டிக்கு இடம்பெயர்க்க பல சதிகள் நடந்த போதும் யாழ் மத்திய நூலகர் பாக்கியநாதன் அவர்களதும் விசேட ஆணையாளர் மாணிக்கவாசகர்  அவர்களதும் கடும் முயற்சிகளின் மத்தியில் இந்நூலகமும் யாழ்பாண மத்திய நூல்நிலையத்துடன் இணைந்தது.

காடையரின் அட்டகாசமும் தீமூட்டலும்  



காலங்காலமாக உலக அரசியலுக்கும் நூலகத்திற்கும் நெருங்கிய தொடர்பு  இருந்து வந்திருக்கிறது. ஆட்சியாளர்களைப் பொறுத்துத்தான் நூல்கள் வாசகர்களின் தேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எழுத்து மூலம் வாசிப்பும் வாசிப்பு மூலம் விழிப்பும் விழிப்பு மூலம் புரட்சியும் ஏற்பட்ட சரித்திரங்கள் ஏராளமாக உலகில் குவிந்து கிடக்கின்றன. இதனால் தான் அரசு மாற்றமடைய மாற்றமடைய நூலகத்தில் வாசிப்பிற்கு அனுமதிக்கப்படும் நூல்களும் மாற்றமடைகின்றன. நூல்கள் என்பது அறிவுவளர்ச்சிக்கருவி என்ற கருத்து மாற்றமடைந்து அரசியல் திருப்ப கருவியாக மாற்றமடைந்து எத்தனையோ வன்முறைகள் தோற்றம் பெற்ற சரித்திரங்கள் ஏராளமுண்டு.
 
                       
                                      அவ்வளவு ஏன்..?? இலங்கையில் இனவொடுக்குமுறை பற்றிய விழிப்பை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் அன்று கிராமங்கள் தோறும் முளைத்துவிட்ட வாசிகசாலைகளும் அதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வாசிப்பு பழக்கமும் பெரும் பங்கை வகித்தன. இங்கே வாசிப்பின் அவசியம் உணர்ந்து மக்கள் நூலகத்திற்கு செல்லும் பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க அங்கே சிங்கள ஆட்சியாளர்களின் மத்தியில்  பொறாமையும் கோபமும் தீயாக கொழுந்து விடத்தொடங்கின. அதென்ன இலங்கையின் தலைநகர் கொழும்பில்  அமைந்த மாநகர சபை நூலகத்தை விட பெரியளவில் யாழ்பாணத்தில் ஒரு நூலகம் அமைவது. ஆம் யாழ் மத்திய நூலகம் 15,910 சதுர அடிகளில் அமைந்தது ஒப்பீடளவில் கொழும்பு மாநகர சபையின் பழைய நூலகத்தை விட பெரியது. தமிழர்களுக்கு விழிப்பை நூலகங்கள் ஏற்படுத்தி கொடுக்க அதற்கெல்லாம் தலைமையகமாக யாழ்மத்திய நூலகம் இருந்தது.
                     
                                   
                                          இதெல்லாம் அன்று பதவியில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு பொறாமை எனும் தீயை வளர்த்துவிட்டிருந்தது. ஆம் அப்பொறாமை எனும் தீதான் யாழ்ப்பாணத்தையே திட்டமிட்டு தீக்கிரையாக்கியது. 1981/05/31  அன்றையதினம் தீவைப்பிற்கெல்லாம் பிள்ளையார் சுழியாக யாழ்ப்பாணத்தின் பல இடங்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டன. நாச்சிமார் கோயிலில் வீடுகள் உட்பட கடைகள் உடைத்து திருடப்பட்டன. நாச்சிமார் கோயிலே தீக்கிரையாக்கப்பட்டது. சுண்ணாகத்தில் கடைகள் பல தீக்கிரையாக்கப்பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில்   1981/06/01  அன்று ஆரம்பமானது யாழ்பாணத்தில் அட்டகாசம். கடைகள் திருடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஈழநாடு பத்திரிக்கை நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டது. இதையெல்லாம் கொடுமையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அரங்கேறியது அந்தக்கொடுமை. ஆம் தென்னாசியாவின் சிறந்த நூலகம் இலங்கையிலேயே சிறுவர் நூலகத்தை  பெரியளவில் கொண்டமைந்த இலங்கையிலேயே முதற்தரமாய் திகழ்ந்த யாழ் மத்திய நூல்நிலையம் பொறாமைத்தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையாகிக்கொண்டது. 97,000 ற்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய ஓலைச்சுவடிகளும், அரிய மருத்துவநூல்களும் , பல இலட்சம் பெறுமதியான தளபாடங்களும் ஆங்கில மற்றும் தமிழ் சஞ்சிகைகளும் இனபேதத்திற்கு இரையாகிப்போனது.
                             
                                    1933 ஆம் ஆண்டு பிறந்து ஒரு ஒலைகொட்டிலில் அமைந்து இரு கடைகளுக்கு இடையில் மாறி மாடிக்கட்டிடம் ஒன்றில் தற்காலிகமாய் இயங்கி பண்பாட்டுக்கோயில் வடிவில் மாடிக்கட்டிடமாக வளர்ந்து நின்ற யாழ்நூல்நிலையம் தான் எரிந்து போனது மட்டுமல்லாது எத்தனையோ பாமரமக்களின் உழைப்பு முதல் கொண்டு அறிஞர்களின் அர்ப்பணிப்பையும் தன்னோடு சேர்த்து எரித்துக் கொண்டது. எரிந்த நூலகத்தில் இருந்த பிரிவுகளாவன,

நூலிரவல் வழங்கும் பகுதி [அன்றைய நிலையில் 17000 ற்கும் மேற்பட்டோர் இங்கு பதிவுகளை வைத்திருந்தார்கள்]
புதின ஏடுகளையும் சஞ்சிகைகளையும் கொண்ட வாசிகசாலை
சிறுவர் நூலகம் [8995 நூல்கள் இருந்தன.]
உசாத்துணை நூலகம் [29,500 கிடைத்தற்கரிய புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் இருந்தன]
கருத்தரங்கக்கூடம்
கலாபவனம்
காரியாலயமும் நூற்சேமிப்பு அறையும்.
       
                   இவை அனைத்தும் எரிந்து போனதுடன் பெரும்தொகையான நூல்களின் விபரங்களைக்கூட பெறமுடியாதவகையில் நூற்பட்டியல் பெட்டகமும் ,நூல்வரவுப்பதிவேடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன.

           
                                    யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையம் அருகிலிருந்தும் நடைபெற்ற இக்கலாசாரப்பண்பாட்டுக் கொலையை கேள்விப்பட்டதும் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியரும் பன்மொழிப்புலவருமான தும்பளை தாவீது அடிகளார் என்று தமிழர்களால் அறியப்பட்ட வணக்கத்திற்குரிய பிதா காலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியால் தன்னினுயிரை நீத்தார். நூலகர் உட்பட பல மக்கள் இச்செய்தி கேட்டு திக்பிரமை பிடித்தவர்கள் ஆனார்கள். ஆம் ஒட்டுமொத்த யாழ் நகருக்குமே அது மரணடியாகத்தான் இருந்தது. ஏனெனில் நூலகத்தின் வளர்ச்சியில் தனியொரு மனிதன் சம்பந்தப்படவில்லை ஓட்டு மொத்த யாழ்ப்பாணமுமே சம்பந்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தாரின் மனதை பிரதிபலித்தது நூலகம் என்றால் காடையரின் உள்ளத்தை நூலகஎரிப்பு  பிரதிபலித்து நின்றது. இரண்டாம் உலகயுத்தத்திற்கு காரணமான சர்வாதிகாரி ஹிட்லர் கூட பிரித்தானியா மீது குண்டு வீசச்சென்ற தன் படைகளுக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின்  மீது குண்டு வீசக்கூடாது என உத்தரவு இட்டிருந்தார். ஆனால் பொறுப்பான அரசாங்கமே இச்செயலை செய்தமை யாழ்பாண மக்களிடம் மட்டுமல்ல சிங்களவர்களிடம் கூட - ஏன், உலக அளவிலேயே எதிர்ப்பை தான் கிளப்பிவிட்டிருந்தது.

மீளமைப்பு


எரிந்து போன யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியமைக்க ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களின் ஆட்சியின் போது வழங்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியுதவிப்பணத்துடன் புணர்நிர்மானப்பணிகள் ஆரம்பமாகின. மீண்டும் கட்டப்பட்ட இந்த யாழ் நூலகம் 1984  ஆம் ஆண்டு ஆனி மாதம் நான்காம் திகதி மீளத்திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட்டது. அன்று முதல் இன்று வரை இடையிடையே உள்நாடு குழப்பங்கள் காரணமாக நூல்நிலையம் இடம் மாறினாலும் சிறப்புற அரசால் நிர்வகிக்கப்படு வருகிறது.அண்மையில் சில வருடங்களுக்கு முன்னர்  மீண்டும்  புது வர்ணப் பூச்சுக்கள் பூசப்பட்டு நூலகம்  புதுப்பொலிவுடன் விளங்குகிறது. புதிய நூல்கள் பல தற்போது இருப்பதுடன் பல சேவைகளும் இன்று நூல்நிலையத்தில் இடம் பெறுகின்றன. என்னதான் இருந்தாலும் பழைய நூலக எரிப்பு இன்றும் மாறாத வடுவாக நெஞ்சிலே சோகத்தை விதைக்கிறது.
             
                               நூலகம் இன்று பல அறிவியல் நூல்களை கொண்டு சிறப்புற இயங்கினாலும் மக்கள் அதை பயன்படுத்தும் விதத்தையும்  இன்றைய நிலையையும் பிறிதொரு பதிவில்  பார்க்கலாம்.
          
                                                                                               ~முற்றும்~ 
                                                               

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்