யாழ்பாண நூல்நிலையம் – ஆரம்ப வரலாறு

ஓர் சமூகத்தின் சிறப்புமிக்க அடையாளமாக காணப்படுவது அச்சமூகத்தின் அறிவுத்தேடலும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்தான். அந்தவகையறாக்களில் யாழ்பாண நூல்நிலையம் என்பது வெறுமனே யாழ்பாண தமிழர்களின் அடையாளமாக மட்டும் நோக்கப்படாது ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் சாதனைச்சின்னமாக நோக்கப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அது தன் வர்ணப்பூச்சு சுவர்களுக்குள்ளே பல யாழ்ப்பானத்தவரின் உழைப்பை மட்டும் சுமக்காது பல எரிகாயங்களையும் சுமந்து நிற்க்கிறது. ஓரிடத்தில் ஒரு அறிவுசார்ந்த கட்டிடம் எழுகிறதென்றாலே அதன் பின்னால் அவ்விட மக்களின் கடின உழைப்பும் கடும் முயற்சியும் இருக்கிறது என்று தானே பொருள். அந்தவகையில் யாழ்பாண நூலக வரலாற்றை அரசியல் சார்ந்த காரணங்கள் அன்றி வரலாற்று நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு அறியத்தருவதே இத்தொடரின் நோக்கம்.

தோற்றுவாயும் தொடக்கமும்

இன்று பெரியஅளவில் பல புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தன்னுள்ளே கொண்டு இருக்கும் இந்த நூலகம் 1933 ஆம் ஆண்டு ஒரு சிறு கொட்டிலில் வாசிகசாலையாக இருந்து படிப்படியாக அறிஞர்களின் கடும் முயற்சியாலேயே இன்றைய நிலையை அடைந்துள்ளது.
                   
                யாழ்பாணம் அச்சுவேலியை சேர்ந்த க.மு.செல்லப்பா என்பவரே நூலகத்தின் பிறப்புக்கு காரணமாயிருந்தவர். இவர் யாழ்மாவட்ட நீதிமன்றத்தில் சங்கடத்தார் எனும் காரியதரிசி பதவியிலிருந்தவர். நூல்நிலையம் ஒன்றை அமைத்து யாழ்ப்பாண வாழ் மக்களின் அறிவை மென்மேலும் அதிகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சமூக ரீதியான விழிப்புணர்வை மட்டுமல்லாது அறிவு வளமிக்க ஓர் சமூகத்தை ஏற்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதன்காரணமாக யாழ்மக்களுக்கு பொதுவான ஒரு நூலகம் தேவை அதற்கு நிதி அன்பளிப்புக்களும் அவசியம் எனும் பொருளில்  “யாழ்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூல்கழகமும்” எனும் பெயரில் 11/12/1933 அன்று தமிழர் தேசிய அச்சகத்தின் மூலம் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அடித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் தான் மக்கள் மத்தியில் நூல்நிலையம் பற்றிய விழிப்பையும் ஆர்வத்தையும் தூண்டியது.
             
                                இவ்வாறு இவர் துண்டுப்பிரசுரங்களை அடித்து வெளியிட்டதும் தான் தாமதம் நூல்நிலையம் என்பது ஒரு வளமிக்க சமுதாயத்துக்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொண்ட மக்களும் கல்விமான்களும் நூல்நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீவிரமாக நிதி திரட்டத்தொடங்கி விட்டார்கள். யாழ்பாண மக்களிடம் மட்டுமல்லாது கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, முதலிய தமிழர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஐந்தோ ,பத்தோ நீங்கள் இடும் நிதி உங்கள் பிள்ளைகளின் அறிவிற்குத்தான் என மனமுருகவேண்டி நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் சேவையாளர்கள். ஒரு சாரார் வீடுவீடாக அலைந்து நிதி சேகரித்த அதேநேரம்  தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் மூலமும், ஆசிரியர்கள் மூலமும், எழுதுவினையர்கள் மூலமும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நிதி சேகரிக்க முயன்றனர் நூலகவிரும்பிகள். அவர்களின் திட்டமெல்லாம் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் தோறும் நூல்நிலையங்கள் எழவேண்டும் என்பதும் அதற்கெல்லாம் நடுநாயகமாக யாழ் மத்திய நூல்நிலையம் பெரியளவில் அமைய வேண்டும் என்பதும்தான். எதையுமே படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிக்க தெளிவுடன் செயற்பட்டார்கள். தமிழ் தமிழ் என தமிழை முக்கியத்துவப்படுத்தினாலும் பிற மொழி நூல்களும் இருக்க வேண்டும் என்பதில் உருதியாக இருந்தனர் அவர்கள்.
                                         

                                               1934/6/9 அன்று யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் யாழ்பாண மக்களின் பகிரங்க கூட்டம் ஒன்றை கூட்டுவதன் மூலம் நூலக சபை ஆரம்பித்தல் பற்றியும் அதற்கான உத்தியோகத்தர் தெரிவையும் மேற்கொள்ளலாம் என தீர்மானித்து அதன்படியே அன்றைய யாழ் மாவட்ட நீதவான் சி.குமாரசுவாமியை தலைவராக கொண்டு ரி.ஐசாக் தம்பையா, சி.பொன்னம்பலம், க.மு.செல்லப்பா, வேலுப்பிள்ளை, முத்தையா போன்றவர்கள் முக்கிய பதவியில் இடம்பெற நூலக சபையும் தெரியப்பட்டது.

                                                  இதன்காரணமாக நூலகம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஆங்காங்கே தீவிரமாக இடம் பெற்றதுடன் வீடுவீடாகச்சென்று நூல்களும் சேகரிக்கப்பட்டது. நூல்நிலையத்தின் முக்கியத்தை அறிந்த மக்களும் அதற்காக உதவியதுடன் தாமும் மனமுவந்து உழைக்கத்தொடங்கினர். இவ்வாறு நூல்களும் பணமும் கையிலே சேரத்தொடங்க ஆஸ்பத்திரி வீதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து 1/8/1934  அன்றிலிருந்து நூல்நிலையத்தை அங்கே இயங்க வழிசெய்தனர். அன்றைய நூலகத்தில் இரவல் பகுதியில் புதிதாக வாங்கிய நூல்கள் 150 உம் மக்களிடையே சேகரித்த நூல்கள் 694 மாக மொத்தம் 844 நூல்கள் இருந்திருக்கின்றன. நூலகத்தின் நல் நோக்கத்தை கருத்தில் கொண்டு அன்றைய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இலவசமாகவே தங்கள் பிரதிகளை வழங்கின. இந்த நூல்நிலையம் நாள்தோறும் 50 வாசகர்களுக்கு பயன் கொடுத்ததுடன் காலை 8 இருந்து மாலை 7.30 வரை சேவையாற்றியது.
                         
                                        இவ்வாறு மக்களின் பயனை உணர்ந்து பெரிய கடைபகுதி கடைகாரர்கள் முதல் கொண்டு மாவட்ட நீதிமன்றம், கச்சேரி முதலான கந்தோர்களில் கடமையாற்றியவர்கள் வரை தம்மாலான உதவிகளை செய்தனர். ஆனால் தமிழ் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடிக்கடி விண்ணப்பங்கள் அனுப்பிய போதும் அவர்கள் என்றுமே எதுவும் அனுப்பவில்லை என்றே நூலகக் காரியதரிசிக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. மாணவருக்கு  நல்வழியை சொல்லித்தரும் ஆசிரியர்களின் இந்நடத்தை வெட்ககேடானதுதான்.

நகரசபை பொறுப்பேற்றல்

இந்நிலையில் நகரசபையினர் தாங்களே ஒரு நூலகத்தை ஆரம்பிக்க எண்ணியபோது நூலகசங்கத்தார் இந்நூலகத்தையே நகரசபையின் பொறுப்பில் ஏற்கும் படி கூறி 1/1/1935 தொடக்கம் நகரசபையிடம் கையளித்தனர். நகரசபையினர் பொறுப்பெடுத்தவுடன் நூலகத்தை வேறொரு கடைக்கு மாற்றி அங்கே சந்தடி சத்தங்கள் அதிகமாயிருந்தபடியால் யாழ்பாண வாடிவீடிற்கு அருகாமையிலுள்ள ஓர் மாடிகட்டடதிற்கு 1936 ஆமாண்டு முதல் மாற்றியுள்ளனர். இங்கு சிறப்புற நூல்நிலையம் இயங்கிவருகையில்தான் இலங்கை சுதந்திரம் பெற்று யாழ்பாணம் மாநகர சபை எனும் வடிவமெடுத்தது. இவ்வாறு உலக அரங்கிலும் இலங்கையின் அரங்கிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட போதுதான் அப்போதைய யாழ்மாநகர மேஜர் சாம் .ஏ. சபாபதி யாழ்பாண நூல்நிலையத்தை முழு இலங்கையும் கண்டு வியந்து பலன்பெறும் வகையில் கட்டியமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். அதன் நிமித்தம் 16/6/1952 அன்று பகிரங்க கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பயனாக “யாழ்பாண மத்திய நூல்நிலைய சபை” எனும் இயக்கம் உடனடியாக ஆரம்பமானது.

                                                                  ...........தொடரும்..................
[இதன் அடுத்த பதிவிற்கு ]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னாது? மைக்கேல் ஜாக்சன் செத்துட்டாரா?

மியாவுக்கு கல்யாணம்

2012 இல் அதிகமானோரை ஈர்த்த 10 வீடியோக்கள்-யூடியூப்