படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-01


[ரசிகர்கள் வேறு வெறியர்கள் வேறு இப்பதிவு வெறியர்களுக்குரியது]

தமிழனாய் வாழப்பெருமைப்படுவோம், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் வாய் கிழியக்கத்தும் நாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மூதாதையர் சாதித்த சாதனைப் பெருமைகளின் பின்னால் நம் கையாலாகாத தனத்தை மறைத்து  கொள்ளப்போகிறோமோ தெரியவில்லை. இன்று தமிழரெல்லாம் ஆனா ஊனா என்றால் தமிழனும் சாதித்தவன் தான் என்று சில நூற்றாண்டுக்கு முன்நடந்த சரித்திரச்சான்றுகளை எடுத்துக்காட்டுவது பிள்ளை பெறாத மலடி தன் தாயும் முன்னோரும்  பிள்ளை பெற்றவர்கள் தான் என்று பெருமைப்படுவதுபோல்தான் இருக்கிறது.


                                                                                                                   அதுவும் ஒருவகையில் சரிதான் நாங்கள் சாதித்திருந்தால் தானே இன்றைய சாதனைகளை இட்டு பெருமைகொள்ள. நமக்குத்தான் சாதிக்கும் எண்ணமே இல்லையே நம்மட எண்ணமெல்லாம் திரையுலக கதாநாயகர்கள் காறித்துப்பின இடத்தில் கற்கோயில் அமைப்பதில்தானே இருக்கிறது. திரையுலகுக்காக நம் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள்  ஊரூராக சாதித்துக் கொண்டிருப்பது என்ன கொஞ்சமா நஞ்சமா....??? சொன்னா நெஞ்சமே வெடித்திடும் அளவிற்கு பண்ணி வைத்திருக்கிறார்கள். ஒருநிமிடம் இன்றைய இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் உங்கள் வருங்கால கனவு என்ன என்று கேட்டால் விஜய் மாதிரி வரணும், சூர்யா மாதிரி ஆகணும்னு தான் சொல்லுவார்கள் அவர்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்று பெருமை வேறு பட்டுக்கொள்வார்கள்.


முகப்புத்தக அலப்பறைகள்               

இன்னும் ஒரு சிலர் ஒருபடி மேலே போய் தாங்கள் இவ்வளவு காலமும் இப்போதும் அப்பாவின் தயவில்தான் சாப்பிட்டு சந்தோசமாய் இருக்கிறோம் என்பதையும் மறந்து தங்களின் அப்பாவின் ஸ்தானத்தையே அந்த நடிகனுக்கு விட்டுக்கொடுத்து தங்கள் தாயை கேவலப்படுத்துவதுடன் தங்கள் குடும்ப கௌரவத்தையும் காற்றிலே பறக்க விட்டு அதிலே பெருமைப்பட்டு கொலரைவேறு தூக்கி விட்டுக்கொள்கிறார்கள் கொலர் என்ன கொலர் விட்டால் எதையுமே தூக்கிவிடுவோம் எனும் சாயலில். அதன் தொடர்ச்சியாகத்தான் பலர் தம் முகப்புத்தகங்களிலும் ,ட்விட்டர்களிலும் தங்களின் பெயர்களின் பின்னால் விஜய், சூர்யா, எந்திரன், தசாவதாரம், வேலாயுதம், காவலன், சிங்கம், ஏழாம்அறிவு ,அந்நியன், பில்லா , மங்காத்தா, புடலங்கா ,கத்தரிக்கா  எனும் பெயர்களைச் சேர்ப்பதுடன் மட்டும் நின்று விடாது இப்பெயர்களினால்தான் தங்கள் முகப்புத்தகம் பிரபலமானது என்று பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள். [அப்பாவின் பெயருக்கு பதிலாக வேறொருவனின் பெயரை போட்டால் குடும்பம் நாறிடாது...?? கொள்கைகளை பின்பற்றுவோர் கொள்கைவாதிகளின் பெயர்களை உதாரணமாக கம்யுனிஷத்தை பின்பற்றுபவர்கள் சேகுவேராவின் பெயரையும், அகிம்சையை விரும்புவோர் காந்திஜியின் பெயரையும் தங்கள் பெயர்களின் பின்னால் சேர்த்துக்கொள்வதை இங்கு குறிப்பிடவில்லை]



    அட இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பது தொலைந்து போய் கம்னியூனிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே பிளவுற்பட்டு ரஷ்ய அமெரிக்க பனிப்போர் நிகழ்ந்தது போல் இந்த நடிகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் தகராறுகள் இருக்கிறதே வெட்டுகொத்து உயிர்ப்பலி வரை போய் முடிந்திருக்கிறது. முன்னர் எல்லாம் நாயகர்களுக்குத்தான் ரசிகர் மன்றம் வைத்திருந்தார்கள் ஆனால் இன்றோ நாயகனை எதிர்ப்போரை போட்டுத்தள்ளுவோர் சங்கம் [காதலியை கேவலப்படுத்தினால் கொதித்தெழும் காதலன் போல]  என்று   வன்முறையில் கூட இறங்கத்தயாராகி விட்டார்கள். இவ்வளவு ஏன் முகப்புத்தகத்தில் விஜய் வெறியர்களின் சார்பான ஒரு குழுமத்தில் யாரோ ஒரு அப்பாவி விஜயைப் பற்றிக்கேவலமாக உண்மையை தெரிவித்த பாவத்திற்காக அவனை நேரிலே போய் நயப்புடைத்திருக்கிறார்கள் இந்த வெறியர்கள். இதே போன்று பல பல சம்பவங்கள் பல கதாநாயகர்களுக்காக தாராளமாக நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு காசுக்காக தன்னை ஆட்டும் நாயகனுக்காக அடிபடுவதே உச்சகட்ட கேவலம் அதற்குள் தாங்கள் அடிகொடுத்ததை போட்டோவுடன் எடுத்து பெருமைவேறு படுக்கொள்கிறார்கள் இந்த அவனா நீக்கள். [ஒரு ஆம்பிளை மீது ஒரு ஆம்பிளை வெறி கொண்டு அலைந்து தளபதி வெறியர்கள், தல வெறியர்கள் என்று பெயர்களைச் சூட்டிக்கொண்டால் உங்களை சுயவர்க்க வெறியர்கள் எனும் சாயலில் அவனா நீ என அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது.]

தலைவன் ~ அண்ணன்

நம்மவர்கள் அடுத்து நடத்தும் கூத்து  ரஜினி ,கமல்,விஜய் அஜித், போன்ற நடிகர்களை தலைவர், அண்ணா என்றெல்லாம் கதைப்பதுடன் மட்டும் நின்று விடாது இருபத்து நான்கு மணிநேரமும் இதே சிந்தனையுடன் அலைவது. நடிகர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் கிழித்து விடவில்லை. எந்த ரீதியில் அவர்களை தலைவர்களாக ஏற்று அவர்கள் கொள்கைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். உங்கள் காசை உங்களிடம் இருந்து உறிஞ்சி தாங்கள் உயர்ந்தார்களே அதற்காகவா...?, இல்லை தங்கள் அரசியல் பிரவேசங்களுக்கும் சொந்த பிரச்சனைகளுக்கும் ரசிகர் மன்றங்களை பயன்படுத்துகிறார்களே அதற்காகவா...?? [ரசிகர்களை என் சொந்த தேவைக்காக பயன்படுத்தமாட்டேன் என ரசிகர் மன்றத்தை கலைத்தவர்களை பற்றி நான் இங்கு கதைக்கவில்லை]                                                                உண்மை என்னவெனில் நடிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள் ஆனால் நாம் தான் படம் பார்ப்பது ஒரு மன அமைதிக்காகவும் சந்தோசத்திற்காகவும்தான் என்பதை மறந்து படத்திற்கு வெறித்தனமாக அடிமையாய் அலைகிறோம். அதை விடுங்கள் அது என்ன அண்ணன் சொந்த அண்ணன் தம்பி காட்டாத பாசத்தையல்லவா அள்ளியள்ளி காடுகிறீர்கள் ..?? [அண்ணன் என்று அழைப்பதன் மூலம் உன் அப்பாவை சந்தேகப்படச் சொல்லுகிறீர்களா.....??? இல்லை நடிகரின் அப்பாவை சந்தேகப்படச் சொல்லுகிறீர்களா....???]

                        இவர்களிடம் எல்லாம் உங்களுக்கு பிடித்த முதல் பத்து பேரை சொல்லுங்கள் என்றால் அதிலே குறிப்பாக முதல் ஐந்து இடங்களுக்குள்ளே ஒரு நடிகரின் பெயராவது கட்டாயம் இருக்கும். ஏன் உனக்காக உழைத்த அப்பா, அம்மா இல்லையா?? இல்லை கூடப்பிறந்த சகோதரங்கள் இல்லையா....??? அவ்வளவு ஏன் உன் முன்னேற்றத்தில் அக்கரை கொண்ட நண்பர்கள், ஆசிரியர்கள்....??? நீங்கள் ஒழுங்கான மனிதனாய் இருந்தால் உனக்கு பிடித்த முதல் பத்து பேரென்ன முதல் நூறு  பேருமே உன்னை அறிந்த தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உன் மீது எந்த வகையிலுமே அக்கறை இல்லாத உன்னை யாரென்றே தெரியாத ஒரு நடிகனை கூறுகிறாய் என்றால் நீ எவ்வளவு தூரம் அடிமட்டமான நிலையில் உன்னை சுற்றி எந்தொரு அன்பானவர்களும் இல்லாத நிலையில் இருக்கிறாய் என்பது நான் சொல்லி விளங்க வேண்டியதில்லை.

                                    .........தொடரும்........  

இதன் அடுத்த பதிப்பிற்கு இங்கே 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்