கிறிஸ்மஸ் - ஜேசு பிறந்த நாள்தானா?



கிரிஸ்மஸ் என்பது ஒரு உலகளாவிய பண்டிகை என நம்பப்பட்டு வருகிறது. மத எல்லைகளைத் தாண்டி இது பெரும்பாலும் உலகத்தின் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையாகவே இது அத்தனை மத சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. ஆனால் அதற்காக நாம் கொண்டாடுவதால் பாதகமில்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அப்படி இருந்தால்கூடப் பரவாயில்லை. இது உண்மையில் காலநிலை சம்பந்தப்பட்ட பண்டிகை. டிசம்பர் மாதம் என்பது மேற்குலக நாடுகளின் அதி பனிப்பொழிவுக் காலம். சீசன். அந்த நேரத்திலே உருப்படியாக எதுவுமே செய்ய முடியாது என்பதால், மகிழ்ச்சிகரமாக ஏதாவது செய்வோம் என முடிவெடுத்துக் கொண்டாடுவதுதான் கிரிஸ்மஸ். உண்மையில் இது ஒற்றை நாள் தேவதூதன் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. அந்தக் காலப்பகுதி முழுவதற்குமான மொத்தப் பண்டிகை. உண்மையில், இயேசு பிறந்தது டிசம்பரில் இல்லை, ஒக்டோபரில்தான் என ஒரு கதை காற்றிலே உலாவுகிறது. (அதுபற்றி பெரிதாக ஆதாரம் சிக்காததால் நான் மூக்கைக் கொடுத்து புண்ணாக்கிக்கொள்ள விரும்பவில்லை. J )

ஆங்கிலேயர்களால், அல்லது மொத்தமாக மேற்குலகத்தவர்களால், அவர்கள் நம்மை ஆண்டபோது கடத்தப்பட்ட கலாசாரம்தான் இந்தப் பண்டிகை. போதாததற்கு கிறிஸ்தவர்களின் போப்பான கிரகேரியால் தயாரிக்கப்பட்ட கிரகேரியன் கலண்டரைவேறு நாங்கள் பின்பற்றுவதால், அதன் வருடப்பிறப்புவேறு அந்தக் காலகட்டத்திலேயே வந்து தொலைவதால், அதேவேளை நமக்கு பனிப்பொழிவுதான் இல்லாவிட்டாலும் எதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக மழையாவது பெய்து தள்ளுவதால் அது நமக்கும் சீசனாக இருப்பதால், யேசுவேறு அந்தத் திகதியில் பிறந்தவர்தான் என நம்பப்படுவதால், எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கிலேயக் கலாசாரத்தின் மேலுள்ள விருப்பத்தால் நாங்கள் இந்தப் பண்டிகையை விமரிசையாகத்தான் கொண்டாடுகிறோம்.  தங்களை நாத்திகர்களாக சொல்லிக்கொள்பவர்களும், அந்தக் காரணத்தால் இந்துப் பண்டிகைகளை புறக்ணிப்பவர்க்களும்கூட கிரிஸ்மஸ்சை கொண்டாடுகிறார்கள். அல்லது கருணாநிதி போன்ற சோரம் போபவர்கள் வியாபாரத்துக்காகவும்  இதனை கொண்டாடுகிறார்கள். நாத்திகனாக என்னை நம்பிக்கொள்பவன் என்கிற அடிப்படையில் எனக்கு கிரிஸ்மஸ்ஸில் ஈடுபாடு இல்லை. இந்துவாகப் பிறந்தவன் நாத்திகனாக மாறினால் அவன் இந்துசமயத்தை மட்டும்தான் கழுவி ஊற்றவேண்டும், மற்ற மதங்களை மதிக்கவேண்டும் என்று இல்லை. ஆனால், ஒரு தத்துவவாதியாக நான் இயேசு கிறிஸ்துவை (இயேசு கிறிஸ்து என்பது அந்த மனிதரின் பெயரே இல்லை. யேஷுவா.) மதிக்கிறேன், அப்படி ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்ததை நம்புகிறேன். அந்த மனிதரின் பிறப்பாக எண்ணப்பட்டு கொண்டாடப்படுவதால், அது என்ன இழவாக இருந்தாலும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் நாங்களும்  கொண்டாடித் தள்ளுவதை பொறுத்துத் தொலைந்தாலும், உண்மையாகவே அதனை கொண்டாடும் யோக்கியதை உள்ள பனிபொழியும் நாட்டுக்காரர்களின், தங்கள் தாய்மொழியிலேயே தங்களின் பெயரை வைத்துக்கொள்ளும் மனிதர்களின் வழக்கங்களை ஆராய்வோம்.

எதற்கும் இருக்கட்டும், அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். (தைப்பொங்கலை விட கிரிஸ்மஸ் முக்கியமான பண்டிகையாக இருக்கும் ஒரு சமூகத்தில் வாழ்வதற்காக வெட்கப்படாத யாருமே share if you are proud to be a Tamilan செய்யாதீர்கள். கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். அடிப்படையிலே இரண்டுமே சீசனுக்கான பண்டிகைகள்தான். ஒன்று மதக் கலப்பில்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுடையது, மற்றையது தமிழர்கள் அல்லாதவர்களுடையது.)



கிரிஸ்மசின் சில பாரம்பரியங்கள் புவியியல் கடந்து, வரலாறு கடந்து உலகளவில் பொதுவானவை. கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, பரிசுகள்... எல்லாமே வந்த பின்னணியை ஆராய்ந்தோமானால் கிறிஸ்மஸ் என்பது ஒரு தனிப்பட்ட பண்டிகை அல்ல, வெவ்வேறு காலகட்டத்தின் வெவ்வேறு பண்டிகைகளின் தொகுப்பு, சேர்ந்து காலப்போக்கில் உருவான ஒரு புதுப் பண்டிகையேயன்றி வேறில்லை என்பது தெளிவாகும்.


ஆரம்பகாலத்திலே தேவாலயங்களில் கொண்டாடப்பட்ட வருடாந்த விருந்தே கிறிஸ்மசாக இருந்தது. அந்த விழாவை கி பி 200 காலப்பகுதியில் கிறிஸ்துவின் பிறந்தநாளில் கொண்டாடலாமே என யோசித்தார்கள். அந்தக்காலத்தில் அறிவின் மையமாக இருந்த அலெக்சாண்டிரியாவின் சிந்தனையாளர்கள் அந்தப் பிறந்தநாள் மே 20 இல் வருவதாக கணித்தார்கள். அதிலிருந்து நூற்றெண்பது வருடங்களில் ரோமில், ஜூலியஸ் I தலைமையில்  உலகளாவிய பல பிரதேசங்களின் காலப்பகுதியுடன் பொருந்துவதால் அதனை December 25 க்கு மாற்றினார்கள். உண்மையில், அந்த நாளானது ரோமர்களின் முக்கிய கடவுளான சூரியனின் பிறந்தநாளாகும். எனவே, சூரியன் பிறந்த நாளில்தான் ஜேசுவும் பிறந்திருக்க வேண்டும் என்கிற மொக்கையான லோஜிக்கின் அடிப்படையில்தான் அந்த நாளில் ஜேசு பிறந்ததாக நம்பப்படுகிறது என ஒரு கதை இருக்கிறது.

கிறிஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை ஜெர்மன் மொழியில் பெயர்த்தபோது மார்ட்டின் லூதர் கிங் (சீனியர். இவர், ‘அவர் அல்ல.) அதிலுள்ள மொக்கையான, நம்பமுடியாத, பிற்போக்கான தகவல்களை தவிர்த்தார். அதனால், அந்தப் புத்தகத்தை பின்பற்றுபவர்கள் கத்தோலிக்கர்களிருந்து வேறுபட்டார்கள். பழமையை எதிர்ப்பவர்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் ப்ரோட்டஸ்தாந்துகள் எனப்பட்டார்கள். அந்த மாட்டினே கிரிஸ்மசுக்கான கிறிஸ்மஸ் மரத்தை அறிமுகப்படுத்தியவர் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே மரங்களை அலங்கரித்து வீட்டில் வைக்கும் வழக்கம் இருந்தது. இதற்காக கூம்பு வடிவமுள்ள ஃபிர் அல்லது பைன் மரத்தை பயன்படுத்துவார்கள்.  (ஒரு பிர் மரம் சராசரியாக ஆளுயரத்துக்கு வளர பதினைந்து ஆண்டுகள் எடுக்கும்.  பதினைந்து கிறிஸ்மஸ்.களை தாண்டிய ஒரு மரத்துக்கு அடுத்த கிறிஸ்மஸ் இல்லை.) அந்த வழக்கத்தை பின்பற்ற நினைத்து நாங்கள் சவுக்கு மரங்களை இம்சை படுத்துகிறோம்.

X Mas என்று கிரிஸ்மசை குறிப்பிடும் வழக்கம் ஜெர்மனியர்களுடையது. இது ஜேசுவின் பெயரை எக்ஸ் என அழைப்பதாகும் என பலர் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். உண்மையில் X என்பது இயேசுவின் பெயரை கிரீக்கில் எழுதும்போது வரும் முதலாவது எழுத்தாகும். (X – Chi… (Χριστός) )

துருக்கியின் பட்டாரா கிராமத்தில்  கி பி 270 களில் வாழ்ந்த செயின்ட் நிக்கலஸ் என்கிற ஒரு பாதிரியார் மணமகனுக்கு கொடுப்பதற்கு பொருளில்லாததால் விபசாரத்தில் ஈடுபட முடிவெடுத்த சகோதரிகளான  மூன்று பெண்களின் திருமணத்துக்காக அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களது வீட்டுக்குள் இறங்கி கொஞ்சப் பொருட்களை வைத்துவிட்டுப் போனார்,  அவற்றை வைத்து பெண்கள் திருமணத்தை முடித்தார்கள் என்கிற கதையினை அடிப்படையாக கொண்டு, அந்தப் பாதிரியார் கிறிஸ்மஸ் இரவுகளில் வீடுகளின் புகைக்கூடு வழியாக இறங்கி, சிறுவர்களின் காலுறைகளில் பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுப் போவார் என்கிற நம்பிக்கை பரவியது. செயின்ட் நிக்கலஸ் காலப்போக்கில் சண்டா கிளாஸ் ஆகி, வட துருவத்தில் அவருக்கு பெரிய மாளிகையே இருக்கிறது, தமக்கு வேண்டியவற்றை சிறுவர்கள் எழுதி அங்கெ அனுப்பினால்,  பிளிட்சர், கொமெட்,குபிட் உள்ளிட்ட ரெயின்டியர் மான்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து வந்து அவர்  தருவார் என்கிற அளவில் போய்விட்டது. செயின்ட் நிக்கலஸ் தான் (சண்டா கிளாஸ் ) பைபிளில் வராத மிகப் பிரபலமான புனிதர். அதிகளவில் வரையப்பட்ட புனிதரும் இவர்தான். வங்கி, அடைவு, கடலோடல் போன்றவற்றுடன், திருட்டு, அறிவுத் திருட்டு மற்றும் விலங்குகளை உண்ணுவதற்கும் புனிதத் தெய்வமாக இவர் வழிபடப்படுகிறார்.


கிறிஸ்மஸ் : சில லோளுலாயிகள்..
·         பேஸ்புக் போஸ்டுகளை ஆராய்ந்ததில், கிறிஸ்மசுக்கு சரியாக பதினான்கு நாட்களுக்கு முன்னால்தான் பெருமளவான காதல்கள் பிரிகின்றதாம்.
·         கிறிஸ்மஸ் காலப்பகுதியில் தற்கொலைகள் ஏனைய நாட்களை விட குறைவுதான். எப்போது அதிகம் தெரியுமா? கிறிஸ்மஸ் பன்னிரண்டு நாள் கொண்டாட்டங்களின் கடைசி நாள், ஜனவரி ஆறு.
·         கிறிஸ்மஸ் ஈவ் எனப்படும் கிறிஸ்மஸ் இரவில், மனம் தூய்மையானவர்களுக்கு, மிருகங்கள் பேசுவது கேட்கும் என்பது ஜெர்மனில் உள்ள கதை.
·         உலகத்தில் ஏறத்தாழ 2106 மில்லியன் சிறுவர்கள் இருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு 2.5 சிறுவர்கள் என்று சராசரியாக வைத்தாலும், ஒரு கிறிஸ்மஸ் இரவில் அனைத்து சிறுவர்களின் விருப்பத்தையுன் நிறைவேற்ற, சண்டா 842 புகைக்கூண்டுக்குள் இறங்கவேண்டும். அதுவும் 221 மில்லியன் மைல் ஓடி. ஒவ்வொரு வீட்டுக்கிடைப்பட்ட தூரத்தையும் அவர் 0.0002 செக்கனுக்குள் கடக்கவேண்டும்.


கிறிஸ்மஸ் சரியா, பிழையா, கொண்டாடலாமா கொண்டாடப்புடாதா... எதுவும் தேவையில்லை. இயேசுவை பின்பற்றும் மதத்தை விடுங்கள், இயேசுவின் ஏதாவது ஒரு நல்ல கருத்தை பின்பற்றினால், நீங்கள் அவரது பிறப்பை கொண்டாடத் தகுதியானவரே. இல்லை என்றால், நீங்கள் கிறிஸ்துவின் மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், வெறும் கேளிக்கைக்காக கொண்டாடுபவரே. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்