ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்சி என்ன செய்கிறது?




பிறக்கும் ஆங்கில புதுவருடத்துக்கு வெட்கமே இல்லாமல் ராசிபலன் எழுதத் தொடங்கியிருப்பார்கள் நமது சோதிடர்கள். அதை வாங்க முன்பதிவு செய்திருப்பார்கள் நமது மக்கள். ‘ஆங்கில புதுவருட சனிப்பெயர்ச்சி... கேட்கவே கேவலமாக இல்லை? சனிபகவான் என்ன, மக்களை வதைப்பதற்கான கோர்ஸை ஈஸ்வரனிடம் இங்கிலிஷ் மீடியத்திலா படித்தார்? இது ஒரு கூட்டம், அடுத்தது தமிழ் புதுவருடத்தை தான் கொண்டாடுவோம், இதெல்லாம் இங்கிலிஸ்.. என்று. ஜனவரி, பெப்ரவரி என்பதை தை, மாசி என எழுதும் கூட்டம். எந்தக் கூட்டமும் எக்கேடும் கெடட்டும், உலகத்துக்கே, அல்லது பெரும்பான்மை உலகத்துக்கு பொதுவான கிரகேரியன் புதுவருடத்தை, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்துவிட்டு கொண்டாடுவோம், வாருங்கள்.

தற்போது பயன்படுத்தப்படும் கிரகரியன் கலன்டருக்கு முதல் உலகத்தில் ஜூலியன் கலண்டர் பயன்பட்டது. (அதுவரை பயன்பட்ட ரோமன் கலண்டர் சூரிய சுழற்சியிலிருந்து நான்கு மாதங்கள் பின்னால் இருந்ததால் கி மு 49இல் ஜூலியஸ் சீசர், வானியலாளர் சொசிஜீனஸ் ஐ, புதிய கலண்டரை உருவாக்குமாறு பணித்தார். அவ்வாறு உருவாக்கப்பட்டதே ஜூலியன் கலண்டர். ) ஆனால் அது உண்மையான புவிவியல் ஒரு வருடத்துடன் பொருந்தாததால், நூறாண்டு காலங்களில் இடைவெளி ஏற்பட்டது. உண்மையில் ஒரு வருடம் என்பது 365.2524 நாட்கள் (365நாட்கள், 5மணித்தியாலங்கள், 48நிமிடங்கள், 45.51செக்கன்கள்.). எனவே, அதனை அனுசரித்து, 1582 இல் பதின்மூன்றாம் போப் கிரகரியால் இன்றளவும் பயன்படுத்தப்படும் கலண்டர் அமைக்கப்பட்டது. அது, 365 நாட்கள் நீண்டது. இதனால் புறக்கணிக்கப்படும் கால் நாளை மீண்டும் சேர்க்கவே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் கூட்டப்படுகிறது. (மறுபடி, அதனால் மீண்டும் அதிகாரிக்கும் வருடத்துக்கு 0.0024 நாள் என்ற அதிகரிப்பை சமாளிக்க மறுபடி 100 வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடத்தை கணக்கில் எடுக்காமல் விட்டு, அதனால் இழப்பாகும் இரு நாளை மீட்க மறுபடி 400 வருடத்துக்கு ஒருமுறை லீப் வருடத்தை கொண்டாடி சமாளிக்கிறார்கள்.) எப்படியும், எங்களது இந்தக் கலண்டரும் சீரானது இல்லை. இபோதும்வருடத்துக்கு  26செக்கன்கள் பின்னால்தான் உள்ளோம். ஆகவே,  3323 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் பின்னால் இருப்போம். அதை சமாளிக்க, 4000 வருடங்களுக்கு ஒருமுறை, மறுபடி அந்தலீப் வருடத்தை கொண்டாடாமல் விடவேண்டும். இப்போது கூர் கூடியவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும், 3323க்கு பதிலாக  4000 எடுத்தால், மறுபடி குளறுபடி வரும் அல்லவா? ஆனால் அது லட்சக்கணக்கான வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதை விடுவோம்.
போப் கிரகரி

ரோமானியர்கள் பயனபடுத்திய ஜூலியன் கலண்டரில் 10 மாதங்களே இருந்தன. ஜூலை மட்டும் ஓகஸ்ட் மாதங்கள் ஜூலியஸ் மற்றும் ஒகஸ்டஸ் சீசர்களின் ஞாபகமாக பின்னர் இணைக்கப்பட்டது.

மாதம்
லத்தின் பெயர்
காரணம்
ஜனவரி
Januarius
ஜனஸ் என்ற கடவுளின் பெயரால்
பெப்ரவரி
Februaris
பெப்ருவா என்கிற பண்டிகையின் பெயரால்.
மார்ச்
Martius
மார்ஸ் கடவுளின் பெயரால்
ஏப்ரல்
Aprilis
அப்ரோடிட் கடவுளின் பெயரால்
மே
Maius
மையா கடவுளின் பெயரால்
ஜூன்
Junius
ஜூனோ கடவுளின் பெயரால்
ஜூலை
Julius
ஜூலியஸ் சீசரின் பெயரால். (பொ ச மு. 44 லிருந்து.) அதற்கு முதல் ஐந்தாவது மாதமாக குவிண்டஸ் என அழைக்கப்பட்டது.
ஓகஸ்ட்
Augustus
அகஸ்டசின் பெயரால். (பொ ச மு. 8 லிருந்து.) அதற்கு முதல் ஆறாவது மாதமாக செக்ஸ்ட்டஸ் என அழைக்கப்பட்டது.
செப்டெம்பர்
September
ஏழாம், எட்டாம், ஒன்பதாம், பத்தாம் மாதங்கள் என, செப்டம், ஒக்டம், நவம், டிசம் என அழைக்கப்பட்டது. (முந்தைய கலண்டரில் பத்து மாதங்களே இருந்தன.)
ஒக்டோபர்
October
நவம்பர்
November
டிசம்பர்
December



ஜனஸ் என்கிற கடவுள், கதவுகளின் தெய்வமாகும். புதிதாக திறப்பது, தொடங்குவது என்பவற்றின் தெய்வம், அது. அதனால்தான் வருடத்தை தொடங்கும் மாதத்தின் பெயராக அதை வைத்தார்கள். போப்பரசரால் அறிமுகப்படுத்தப்பட்ட கலண்டரிலும் ஜூலியன் கலண்டரின் வழக்கங்களே பயன்பட்டன. அதன்படி வருடத்தின் முதல் நாளாக ஜனவரி முதல் திகதி எடுக்கப்பட்டது. அது ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்டு, பின்னர் உலகளவில் பொதுவாகி இன்று அந்தக் கலண்டரை பயன்படுத்தாதவர்களும் கொண்டாடப்படும் புதுவருடமாக ஆகி இருக்கிறது.

புதுவருடம் : சில உபயோகமற்ற தகவல்கள்...
·         ஏனைய கொண்டாட்டங்களை விடவும், புதுவருடக் கொண்டாட்டங்களின் போதே அதிகளவில் திருட்டுக்கள் நடக்கின்றன.
·         புதுவருடம் என்பதே உலகத்தின் மிகப் பழமையான விடுமுறைக் கொண்டாட்டமாகும். நான்காயிரம் வருடங்களுக்கு முதல் பாபிலோனில் இது கொண்டாடப்பட்டதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (கி மு 1750  காலப்பகுதியில் இவர்கள் தயாரித்த கலண்டரானது ஏறத்தாள இப்போதைய கலண்டரை ஒத்தது. 12மாதங்கள்,  29நாட்கள், 30நாட்கள் கொண்டதாக அடுத்தடுத்து வரும் மாதங்கள் என அது இருந்தது.)
·         ஜனவரி முதல் திகதி என்பது எழுமாற்றாக தேர்வான நாள்தான். கி மு நூற்றைம்பதில் இருந்தே இந்தத் திகதிதான் புதுவருடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.
·         தென்னமரிக்காவின் சில நாடுகளில் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொது மஞ்சள் உள்ளாடை அணிவது பாரம்பரியமாக உள்ளது. அதுவும் சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மஞ்சளுக்கு மாறினால் அது பேரதிர்ஷ்டத்தை தருமாம். இன்னும் கொடுமை என்னவென்றால், மெக்சிகோ பெண்கள் அந்த வேளையில் மஞ்சள் உள்ளாடை அணிந்த ஆண்களை கண்டால், தங்கள் எதிர்காலம் அதிர்ஷ்டவசமாக அமைவதற்காக அவர்களை திருமணம் செய்ய தேர்ந்தெடுப்பார்களாம்.
·         சிலியில் புதுவருடம் பிறக்கும்போது இறந்த உறவினர்களின் சமாதிகளை வணங்குவது வழக்கம். அப்போது அவர்களின் ஆவி நன்மை செய்யும் என்பது ஐதீகம். ஆவி எப்போது வரும் என்பது தெரியாது என்பதால், முதல்நாளே கதிரை போட்டுவிட்டு இடுகாடுகளில் காத்திருப்பது அங்கே வழமை.
·         இன்றுமுதல் பல்லு விளக்குவேன், இனி ஒழுங்காக மூச்சா போவேன் என அவரவர் தகுதிக்கேற்ப புதுவருடத்துக்கு சபதம் எடுப்பதும், வருடம் தொடங்கி பத்தே நாட்களில் அதை கைவிடுவதும் வழமை. இந்தப் பழக்கம் நாலாயிரம் வருடங்களுக்கு முன்னர் பபிலோனிலேயே ஏற்பட்டுவிட்டது.
·         பெல்ஜியத்தில், புதுவருடம் பிறக்கும் நள்ளிரவில், மிருகங்களை எழுப்பி புதுவருட வாழ்த்து சொல்லுவது வழமை.

ஆங்கில புதுவருடம் என்று அழைத்துவிட்டு, அதற்கு இந்துசமயத்தின் ராசிபலன் எழுதுவது இந்துக்களின் வழமை.


கிறிஸ்மஸ் போலவே, ஆங்கில புதுவருடமும் உலகம் முழுவதும் கொண்டாடுவதால் கொண்டாடுவோம் எனக் கொண்டாடுவதில்லை. என்னதான் நமக்கென்று தமிழ் வருடக் கணக்கு இருந்தாலும், அது உண்மையிலேயே பாரம்பரியமானது இல்லை. (தமிழ்வருடப்பிறப்பு, அதன் கூத்து, குத்து பற்றி அறிய இங்கே மவுசை வைத்து ஒரு நசிநசிக்கவும்.) அத்தோடு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள்ளேயே அனைத்து நிர்வாக முறைகளும் நமக்கு பழக்கமானதால், நாம் ஆங்கிலக் கலண்டர் என்கிற பெயரில் கிரகேரியன் கலண்டரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்பதுடன் தவிர்க்கத் தேவையில்லாதது. உலகத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் கிரகேரியன் கலண்டரின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப் படும்போது நாம் மட்டும் கிருஷ்ணரும் நாரதரும் புணர்ந்ததை வைத்து காலத்தை ஓட்ட முடியாது.

ஆனால், இங்கிலிசுக்கு ஆறு, தமிழுக்கு முப்பத்தொண்டு என்று நம்மூர் கிழவிகள் சலம்புவதை தவிர்க்க முடியாது. தமிழ் தமிழ் என்று பினாத்தி, ஊரோடு ஒத்து வாழ் என்கிற தமிழர் பாரம்பரியத்தை மறக்கிறோம்.

புதுவருடம் என்பது மதம், மொழி கடந்தது.      அது ஒரு பழக்க வழக்கத்தால் வந்த கொண்டாட்டம் அல்ல. நாங்கள் பின்பற்றும் ஒரு வழமை சம்பந்தப்பட்டது. இதிலே வேறு எதற்கும் இடமில்லை.

புதுவருட வாழ்த்துக்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்