ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.






ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது.

வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி, வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி, (2.2.1988 இல் பிறந்த அவரை, முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல், துப்பரவு வேளைகளில் உதவுவதும், அல் ஓடைபி, நைப் ஜிசியம் தம்பதியின் ஒன்றரை மாதக் குழந்தையை பராமரிப்பதுவும் அவருக்கு ஒதுக்கப்பட வேலைகள்.

இந்தத் தகவல்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தரவுகளையே சவூதி போலீசாரும், ஏனையோரும் தருகிறார்கள். வழக்கின்படி, 2005 மே 25 இல், மதியத்தின்போது குழந்தைக்கு பால் புகட்டியபோது குழந்தை விக்கியதாகவும், அந்த நேரத்தில் பதட்டத்தில் ரிசானா குழந்தையின் முதுகிலும், கழுத்திலும் அழுத்தி, குழந்தையின் மூச்சுத் திணறலை நிறுத்த முற்பட்டபோது குந்தை இறந்துவிட்டதாகவும், அதன்பின்னர் ஏழு வருடங்கள் நடந்த வழக்கு விசாரணையில் இலங்கை அரசு, ஐ நா, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமையங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும், எந்த முயற்சியும் பலனளிக்காது ரிசான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டார் என்பதுதான் கதை.

இந்த வழக்கிலே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
·         வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் ரிசானாவை வயது கூடியவராக காட்டி இருக்கா விட்டால், அவர் ஒரு சிறுமி என்பதற்கான சலுகைகள் கிடைத்திருக்கும்.
·         ரிசானாவுக்கு பெரிதாளவில் அரபிக் தெரியாததால் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த கேரளத்துக்காரர் அத்தனை சிறப்பாக நடந்துகொள்ளவில்லை. அவரது மொழிபெயர்ப்புக்கள் பொருத்தமானதாக இருக்கவில்லை.
·         சவூதி அரசர் உள்ளிட்ட பலர் இறந்துபோன குழந்தையின் பெற்றோரிடம் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் ரிசானாவை மன்னிக்கத் தயாராக இல்லை.
·         போலீசார் வற்புறுத்தி ரிசானாவிடம் வாக்குமூலம் வாங்கினார்கள்.

இப்படி பல புறக் காரணிகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிறுமியால், மொழியோ, மனிதர்களோ தெரியாத தேசத்தில் எப்படி இவற்றை எல்லாம் சமாளித்திருக்க முடியும்? சமாளிக்கவே முடியாத ஒரு பெண், எப்படி கொலை செய்யத் துணிவாள்?

ரிசானாவின் பாஸ்போட்


எனக்கு ஷரீ ஆ சட்டத்தைப்பற்றியோ, ரிசானா அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டாளா என்பது பற்றியோ தெரியாது. நான் விமர்சிக்கப்போவது அந்த சட்டத்தைப்பற்றி அல்ல. மேலும், சவூதியில் ஷரீ ஆ சட்டமானது சரியாக பின்பற்றப் படுவதில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதுபற்றி விமர்சித்தால் எனக்கும் அமரபதவி கிடைக்கும் என்பதை நான் நன்கறிவேன்.
ரிசானாவின் குடும்பம்

என்னிடம் உள்ளவை சில சந்தேகங்களே.

·         ஒரு சிறுமி, அந்த நாட்டுக்கே வந்து ஒரு மாதம்தான் ஆன, முதலாளியுடன் எந்தவித பிணக்கும் இல்லாத சிறுமி, எவ்வாறு ஒரு குழந்தையை கொலை செய்திருக்கிறாள் என நம்ப முடிகிறது? குழந்தையின் பெற்றோருடன் பிணக்கு இருந்தது என்று எடுத்தால்கூட, அதற்காக கொலைசெய்யும் அளவு வன்மமும், கோபமும், துணிச்சலும் ஒரு சிறுமிக்கு வராது என்பது சும்மாவே தெரியாதா?
·         அப்படியே சிறுமி கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாலும், அவள் இன்னொரு நாட்டின் பிரஜை அல்லவா? என்னதான் சட்டம் இருந்தாலும், வேறு நாட்டின் பிரஜையை கொலை செய்யும்போது அந்த நாட்டை மதிக்கவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது?
·         கொலைதான் என்று எடுத்துக் கொண்டாலும், அதற்கு கொலைதான் தண்டனையா? கற்பழிப்புக்கு கற்பழிப்பும், திருட்டுக்கு திருட்டும் தண்டனை அல்லாதபோது கொலைக்கு எப்படி கொலை தண்டனையாகும்?
·         ஒரு மனிதரை கொல்லுவது என்பதே கொடூரமானதாக இருக்கும்போது, நடுச் சந்தியில், மக்கள் மத்தியில் கழுத்தை வெட்டிக் கொல்லுவது காட்டுமிராண்டித்தனம் இல்லையா? ஒருவருக்கு கொலை தண்டனையாக வழங்கப்பட்டபிறகு, அவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தால் என்ன செய்வது?
·         ஏழு வருடங்கள் போனபிறகும், இன்னொரு குழந்தை பிறந்தபிறகும், வன்மம் வைத்த கொலை இல்லை என்று தெரிந்தபிறகும், உலக நாடுகள் பல கெஞ்சியபிறகும் இறங்காத, இரங்காத குழந்தையின் பெற்றோரின் மனம் எத்தகையது? இப்படியான மனத்தை அவர்களுக்கு உருவாக்கியது எது? மதமா?
·         வாளால் கழுத்தை வெட்டிக் கொல்லலாம் என்பது என்ன விதமான இறைவனால் அருளப்பட்ட சட்டம்? அப்படி என்றால், வெட்டிக் கொள்ளும் அந்த வேலையை செய்பவர் இறைவனால் அல்லவா அனுப்பப் பட்டிருக்க வேண்டும்? மனிதர்கள் நடத்தும் ஒரு அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிக்கு, இறைவனால் மொழியப்பட்ட தண்டனையை வழங்கும் அதிகாரத்தை இறைவன் எப்போது அளித்தான்? இறைவனின் பார்வையில் ரிசானா கொலைகாரி என்றால், தண்டனையை நிறைவேற்றியவரும் கொலைகாரன் தானே?
·         மதத்தின் பெயரால், இறைவனின் பெயரால் கழுத்தை வெட்டும் மனிதர்களின் நடுவிலா நாம் வாழ்கிறோம்? ரிசானாவின் கொலையை விமர்சிக்கும் குறித்த பகுதியினர், வழக்கு விசாரிக்கப்பட்ட விதத்தை குறை சொல்லுகிறார்களே தவிர, கொலை செய்யும் வகையான தண்டனை முறையை விமர்சிக்கவில்லை. தவறுதலாக குழந்தையை கொல்லும் சிறுமிக்கு கொலைதான் தண்டனை என்றால், சிறுமிகளை கற்பழித்து கொலை செய்யும் காமுகனுக்கு என்ன தண்டனை? அதே கழுத்து வெட்டுத்தானே? இது எந்த வகை நியாயம்?
·         கழுத்தை அறுத்து கொல்லப்படவேண்டிய மனிதர்களையும், குற்றங்களையும் உருவாக்கியவர் யார்? சட்டங்களை உருவாக்கிய இறைவன் அல்லாத வேறொருவரா?
·         ரிசானாவின் பெற்றோர் சிறுமியின் மரணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்களாம். அத்துடன் சவூதி அரசு கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டார்களாம். இது எந்த வகையில் மனிதர்கள் செய்யும் செயலாக எடுத்துக் கொள்ளுவது?
ரிசானாவின் வாக்குமூலமாக வெளியிடப்பட்ட கடிதம்.


மனிதர்களை விட மதம் பெரிதென்கிற மனிதர்களை மாற்றவே முடியாது. கொலை செய்யுமாறு உனது மதம் அனுமதிக்கிறதென்றால், முதலில் உன்னிலிருந்து அதை தொடங்கு என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. கமல் ஹாசன் என்கிற இந்தியாவை சேர்ந்த மனித நேய சிந்தனையாளர் சொன்னதுபோல, மரணம் என்பது, இயற்கையை தவிர, வேறு எதனால் ஏற்பாடு செய்யப்பட்டாலும், அது கொலைதான்.



ஒரு கொலைத்தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள். முடிந்தால் மட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்