ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......

     
உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க.
அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம்.
         
             திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ....!?.) . ஜோதா எனும் கதாபாத்திரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை என்றும், அவர்களின் காதல் வெளியுலகிற்குத் தெரியாமலே போயிற்று என்றும் திரைப்படத்தின் இறுதியில் கூறியிருந்தார்கள். உண்மை. வரலாறு ஜோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பதிலாக, அக்பர் பாதுஷா ராஜபுத்திரர்களை எப்படித் தன் 'மாமனார் ஆக்கும்' மார்க்கத்தின் மூலம் வழிக்குக் கொண்டு வந்தார் என்ற நோக்கில் 'அக்பர்- ஜோதா' திருமணத்தை அது பார்க்கிறது.

         ஆஜ்மீரை ஆண்ட பிஹாரிமால் அல்லது பார்மால் என்ற ராஜபுத்திர மன்னரிடம் பாதுஷா (அவ்விடம் ஒரு ஞானியின் கல்லறைக்குச் சென்று வணங்கிவிட்டு போனால் போகிறது என்று...) விஜயம் செய்ய நேர்ந்தது... அரண்மனையில் மன்னரின் மகளை (ஜோதா) அக்பர்   சைட் அடிக்க, அண்ணலை அவளும் நோக்க, நம்ம ஊராக இருந்தால் பின்னியிருப்பார்கள்... சக்கரவர்த்தி அல்லவா?  காதல் கல்யாணத்தில் போய் முடிந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய அதிசய சம்பவமாக இருந்தது. இதைப் புரிந்து கொள்ள, ராஜபுத்திரர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.
     
             ராஜபுத்திரர்கள் மொகலாய சாம்ராஜ்யத்தின் தோற்றத்துக்கு (1526 - பாபர்) நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவை ( குறிப்பாக வட இந்தியாவை ) ஆட்சி செய்தவர்கள்.. உதாரணமாக, சம்யுக்தையைக் கடத்திச் சென்று மணம் புரிந்த பிருத்விராஜ் ( தெரியாதவர்கள் காதலியால் கைவிடப்பட சபிக்கிறேன்...) ராஜபுத்திர மன்னன். வீரம் என்று சொல்வார்களே... அந்தச் சொல்லுக்கு மிகப்பொருத்தமான உதாரணம் ராஜபுத்திர வம்சம். வேறெந்த இனத்தையும் விட மண் மீதான பற்றிலும், 'வெற்றி அல்லது வீரமரணம்' என்ற கொள்கையிலும் ராஜபுத்திர மாவீரர்கள் சிறந்து விளங்கினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் தாய்நாட்டின் மீதான பற்றுடனும், வீரத்துடனுமே வளர்க்கப்பட்டார்கள். அதன் காரணமாக உயிரைத் துச்சமென மதித்து மரணம் வரை போராடும் அவர்களை எந்த அந்நிய சக்தியாலும் முழுமையாக அடக்கி விட முடியவில்லை. வந்த எதிரி நாட்டவர்கள்  வென்றாலும், தோற்றாலும் ராஜபுத்திரர்களின் வீரம் பற்றி வியக்காமல் இருந்ததில்லை ( பாபர் முதல் ஔரங்கசீப் வரை ).

           நாம் ஜோதா - அக்பர் கதைக்குத் திரும்பலாம். மொகலாயர்களையும் ராஜபுத்திரர்கள் எதிர்க்கத் தயங்கவில்லை. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் இஸ்லாமிய மன்னரின் ஆட்சியை அவர்கள் எதிர்த்ததில் வியப்பேதுமில்லை. இவ்வாறு மொகலாயர்களால் வழிக்குக் கொண்டு வர முடியாது போன ராஜபுத்திரர்களை முதன்முறையாக அன்பினால் அரவணைத்து வெற்றி கண்டார் மாமன்னர் அக்பர்; ஜோதாவுடனான திருமணத்தின் மூலம். ( அக்பருக்கும், ஜோதாவுக்கும் பிறந்த மகனே அடுத்ததாகப் பட்டத்துக்கு வந்த ஜஹாங்கீர் பாதுஷா. அவரும் ராஜபுத்திரப் பெண்களை மணந்து கொள்ள, மொகலாய - ராஜபுத்திர உறவு வலுப்பட்டமை பிந்திய கதை .)

           ஜோதா அக்பரில் குறிப்பிடப்படாத இன்னொரு விடயம் , ஜோதாவை விடவும் அக்பர் பாதுஷாவுக்குப் பல மனைவிமார் இருந்தனர் - சில இந்து ராணிகள் உட்பட. நம்மவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பீர்பால் - அக்பரின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்- பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அக்பர் - பீர்பால் கதைகள் இன்றளவும் நம் மத்தியில் பிரபலம்... ( தெரியாதவர்கள் எ.சோதியைக் கேட்கலாம்).
        பாதுஷாவின் மதம் சார்ந்த நோக்கைப் பார்ப்போமானால், இந்து - இஸ்லாமிய உறவுக்கு அக்பரின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டாக  இருந்தது. ஒரு தடவை  மதுரா நகருக்கு விஜயம் செய்கையில், அங்குள்ள  கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட தொகை வரியாக விதிக்கப்படுவதை அறிந்த அக்பர் பாதுஷா அதை உடனடியாக நீக்கியதுடன் , முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்கப்படும் 'ஜிஸியா' எனும் வரியையும் நீக்கினார். கூடவே, " நான் எல்லோருக்கும் பொது. இந்து - முஸ்லிம் யாவரும் என் மக்களே.." எனவும் முழங்கினார். இது நடந்தது 1563 இல். ( கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை ஜோதா அக்பரில் நாம் காண முடியும்.) பாதுஷாவின் உயர்மாண்பினைத் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
                                              அக்பர்- ஒரு மொகலாய ஓவியம்.

           இந்துக்கள் பெரும்பான்மையான இந்திய நாட்டை அவர்கள் ஆதரவின்றி ஆள முடியாது, அச்சப்படுத்தி மாற்றி விடவும் முடியாது; அன்பின் மூலமே ஆட்கொள்ள முடியும் என்பது அக்பரின் அசைக்க முடியாத நம்பிக்கை. பாதுஷாவின் அரசவையில் மதப் பாகுபாடின்றிப் பதவிகள் வழங்கப்பட்டன (அரசவை ஆஸ்தான ஓவியர்கள்  பதினேழு பேரில் 14 பேர் இந்துக்கள், ஜோதாவின் சகோதரன் பகவான்தாஸ் முக்கிய அமைச்சர்களில் ஒருவர்). சிவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் அரண்மனையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன; இந்து சமய நிகழ்வுகளில் மன்னர் குங்குமம் இட்டுக்கொண்டு பங்கேற்றார் என வரலாறு பகர்கின்றது. காலப்போக்கில் இறைச்சி உண்பதையும், தாடி வைப்பதையும் கூட நிறுத்திக் கொண்டாராம் ( ஜோதா அக்பரில் ரித்திக்கிற்கு தாடி இல்லை..!). இவையெல்லாம் அரண்மனையைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தின என்பது மெய். எது எப்படியிருந்த போதிலும் மனதளவில் தனது மதத்திற்கு விரோதமின்றி இறுதி வரை இஸ்லாமியராகவே வாழ்ந்தவர் பாதுஷா.தனிமனித ரீதியில்,சமயம் சார்ந்த விடயங்களில் சற்றே ப்ராக்டிகலாக நடந்து கொண்டார் பாதுஷா என்பதே பொருத்தமான கூற்றாகும்.
       
                                                              தர்பார் (அரசவை)

இன, மத பாகுபாடுகளால் நாட்டினைப் (அது எந்த நாடென்றாலும்  சரி) பிளவுபடுத்தும் இன்றைய காலத்தவர்களுக்கு பேரரசர் அக்பரின் வார்த்தைகள் ஒரு படிப்பினை - (விரும்பின், சொற்களை இக்காலத்திற்கேற்ப மாற்றிப் போட்டுக் கொள்ளலாம்..): " மதத்தின் பெயரால் மோதிக் கொண்டிருந்தால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. இந்துவாக நீங்கள் இருப்பின் முஸ்லிம்களுடன் போய் பழகுங்கள், முஸ்லிமாக இருந்தால் இந்துக்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மதத்தவருடனே உழன்று கொண்டிராமல் மற்றவர்களுடன் பழகுவதன் மூலமாகத் தான் நட்புணர்வு வளரும். மாற்றுக் கருத்துக்களைக் கோபப்படாமல் கேட்டு, அவற்றை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் பரந்த மனப்பான்மை வளரும்."      வாள்முனையில் தன் மதத்தினைத் திணிக்காமல் அன்பின் மூலம் இந்துக்கள் வாழும் பரந்த தேசத்தை வெற்றிகரமாக 49 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு சக்கரவர்த்தியின் வார்த்தைகள் இவை.  ஜோதா அக்பரின் இறுதிக் காட்சியில் ரித்திக் ரோஷன் பேசும் வார்த்தைகளிலும் இதன் சாயலை நாம் காண முடியும்.
             
             'ஜோதா அக்பர்' பேரரசர் அக்பரின் ஒரு பக்கமே என்பது மெய். காதலை மட்டுமின்றி அக்பரின் சமயம் சார்ந்த பார்வையையும் அது தொட்டுச் செல்கிறது. மூன்றரை மணி நேரத்தில் அழகான ஒரு காதல் கதையும், இந்திய மக்களுக்கு ஒரு படிப்பினையும் கூறியதில் அது வெற்றியடைந்து விட்டது என்று தான் கூறவேண்டும். ஆனால், அக்பர் பாதுஷா இவ்வளவேயல்ல. இதனை விடவும் ராஜதந்திரம், வீரம், சாம்ராஜ்ய விஸ்தரிப்பு, நீதி தவறாத ஆட்சி என்பவற்றின் மூலம் இந்திய மன்னர்களில் ஒரு ' சூப்பர் ஸ்டார்' எனத் திகழ்ந்த இம் மன்னர் எழுதப் படிக்க இயலாதவர் என்பதை அறியும் போது பிரமிப்பு இரு மடங்காகிறது. அக்பரைப் பற்றி அறிய விரும்பும் வாசகர்கள் "அக்பர் நாமா ( அக்பரின் வரலாறு - அப்துல் ப(f)ஸல்)" படிக்கலாம். அல்லது மதனின் "வந்தார்கள்... வென்றார்கள்" பொருத்தமானதொரு படைப்பு. இந்தக் கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அதிலிருந்து பெறப்பட்டவை.
பிற்குறிப்பு: பாபர் மசூதி நினைவிருப்பவர்களுக்கு- அது அக்பரின் தாத்தாவான பாபரால் கட்டப்பெற்றது.
                                                       


                                                                                                                           
                                                                                                                                       -S.Selvanigethan.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்