தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை - 'நடந்தது' என்ன?
எந்த நேரமும் வேலை வெட்டி இல்லாமல் காலை எழுந்து தேநீர் குடித்துவிட்டு
பேஸ்புக்கில் அமர்ந்து நாங்கள் லைக்குகள் மூலம் சிகிச்சைக்கு உதவி செய்தும்,
ஷேயார்கள் மூலம் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவதுமாக மனித சமுதாயத்தை
காப்பாற்ற, இரண்டு தொழிலதிபர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள் தேசத்தில் ஒரு
நல்ல வேலையை செய்ய. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை கடந்த 19 ஜனவரி
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். அதன் பின்னணி அத்துணை இதயபூர்வமானது. பரவசமான மனிதாபிமான
நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்த ஒரு பெரிய தொடர்கதையின் பாகம் ஒன்றின் கதையின்
முத்தாய்ப்பே அந்த வைத்தியசாலை திறப்பு. இந்த நல்ல காரியம் இத்துடன்
முடிந்துவிடவில்லை என்பதுதான் இங்கே முக்கியம். இதுவரை இதுபற்றி
அறியாதிருந்தவர்களும் அதன் அடுத்த கட்டத்தில் மனமிருந்தால் இணைந்துகொள்ளலாம்
என்பதே இந்தப் பதிவின் செய்தி. எப்படி பல வியாதிகள் மனிதர்களின் மொழி, இன,
பொருளாதாரப் பின்னணி பார்த்து வருவதில்லையோ, அதுபோலத்தான் அவற்றுக்கு எதிரான
மனிதர்களின் போரும் இருக்கவேண்டும். எத்தனையோ மனிதர்களும் நிறுவனங்களும் விளம்பரம்
விடுத்து சேர்ந்து செய்த இந்த நல்ல காரியத்தைப்பற்றி எழுதாதுவிட்டால் கையில் கட்டி
வந்துவிடுமென்று எனக்கொரு சாபம் இருக்கிறது.
முன்கதை சுருக்கம் :
நாயகன் 1:
யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தால், நாட்டில் சமாதானம் மலர்ந்தால் தேவேந்திர
முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரை பாதயாத்திரை போவதாக சூளுரைத்திருந்தார்
சரித்த உனம்பு. அவரது பார்வையில் சமாதானம் வந்துவிட்டதால், தனது நடைபயணத்தை
மேற்கொள்ளப்போவதாக தனது நண்பரான நாயகன் 2
இடம் சொல்லியிருக்கிறார்.
நாயகன் 2 :
2006 இல் தனது சகோதரியை புற்றுநோய்க்கு
பறிகொடுத்ததிலிருந்து அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று பலவழிகளில் வேலை
செய்திருக்கிறார் நாதன் சிவகணநாதன். கலர்ஸ் ஒப் கரேஜ் என்ற பெயரில் நிதியம் ஒன்றை
நிறுவி இயங்கினாலும், அவரது மனதிலிருந்த அந்த உன்னதமான திட்டத்தை செயற்படுத்த
அதில் சேர்ந்த நிதி போதவில்லை. மகரகமவில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கு சில
உதவிகள் செய்ததோடு சரி.
இலங்கையில் மகரகமவில் மட்டும்தான் புற்றுநோய் வைத்தியசாலை இருக்கிறது. நோயின்
தீவிரத்தில் உள்ளவர்கள் அங்கெ தங்கி மருத்துவம் செய்ய வேண்டும். புற்றுநோயின்
தீவிரம் என்பது மிகக் கொடுமையான துடிப்பான வலி, உடல் உள சோர்வு போன்ற வேதனைகள்
அடங்கியது. பல துணைகள் இல்லாமல் புற்றுநோயின் இறுதியை கடப்பதோ, இறப்பதோகூட
வேதனையான ஒன்று. ஆனால் மருத்துவத்துக்காக நோயாளியும் துணைகளுமாக இலங்கையின்
எங்கிருந்தாலும் மகரகமவுக்கு வந்து ஆறு முதல் எட்டு மாதங்கள் துன்பப்படவேண்டி
இருந்தது. இலங்கையின் வேறெங்கிலும் அந்த வைத்தியசாலை இல்லாதது குறிப்பாக
இலங்கையின் வடபாகத்தின் பெரும்பகுதிக்கு பொதுவாக ஒன்று இல்லாதது பெரும் பின்னடைவாக
இருந்தது. எனவே, அதிநவீன வசதிகளுடன் வடபகுதியில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை
நிறுவவேண்டும் என்பதே நாதனுடைய அந்த உன்னதமான திட்டமாகும். சரித்த தனது யாத்திரை
பற்றி சொன்னபோது தானும் இணைந்துகொள்வதாக சொன்னார். நடைபயணத்தின் மூலம் ஒரு
விழிப்புணர்வை உருவாக்கி நிதிதிரட்டி வடபகுதி வைத்தியசாலை கட்டுவதே அவரது நோக்கமான
இருந்தது.
முதலில் அனுசரணை நிதி திரட்டுவதில் சிக்கல் இருந்தபோதும், இவர்கள் இருவரும்
பணிபுரியும் மாஸ் ஹோல்டிங் நிறுவுனர் மகேஷ் அமலியன் 10 மில்லியன் ரூபா தர, பணி
வேகம் பிடித்தது. மொபிடெல் விளம்பரங்கள் மூலம் 20 மில்லியனை திரட்டிக் கொடுத்ததோடு
மொபிடலின் அனுசரனையிளிருந்த இலங்கை கிரிக்கட் அணி நடைபயணத்தில் இணைவதன்மூலம் பாரிய
போதுசனக் கவர்ச்சியை உண்டுபண்ணிக் கொடுத்தது. குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன
உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள் நடைபயணத்தில் அவ்வப்போது கலந்துகொண்டு
மக்கள் ஆதரவை திரட்டினர்.
இந்தப் பயணத்துக்கு டிரைல் என்கிற பெயர் வைக்கப்பட்டதோடு அந்தப் பெயரில்
இணையதளமும் உருவாக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. செங்கல் ஒன்றை வாங்குவதன்மூலம்
நிதி வழங்கும் முறையிலும், ஏனைய முறைகளிளுமாக அந்த இணையதளத்தினூடாகவே முதலில்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஒரு மிலியன் டொலர் சேர்ந்துவிட்டது. பின்னர் இந்தப்
நடைபயணத்தின்போது வீதியெங்கும் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும், அநாதைகளும்,
தொண்டு அமைப்புக்களும் கல்வி அமையங்களும், மாணவர்களும் பிச்சைக்காரர்களும்
கோடீஸ்வரர்களுமாக வழங்கிய நன்கொடைகளின் மூலமும் டீசேர்ட் விற்பனை போன்ற சில்லறை
வருமானங்கள் மூலமும் கிடைத்த பெருந்தொகைப் பணத்தை வைத்து (மொத்தமாக 300 மில்லியன் ரூபா)
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் 5 ஏக்கர் பரப்பில் 120 படுக்கைகளுடன்
அதிநவீன வைத்தியசாலை உருவாக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது.
இத்தனை பெரிய புரட்சியை (ஆம், இந்த வார்த்தை பாவிக்கத் தகுதியுடைத்துதான்.)
உருவாக்கிய அந்த இருவர், முக்கியமாக நாதன் தென்பகுதிக்குரிய புற்றுநோய்
வைத்தியசாலையை – ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை திறக்கப்பட்டதால்
கைவிடப்பட்டுள்ள பழைய வைத்தியசாலைக் கட்டிடத்துள் – உருவாக்கக் களமிறங்கிவிட்டார்.
தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை வீதியூடாக 670 km தூரத்தை முழுமையாகக் கடந்தவர்கள் 11 பேர்தான் எனினும் மொத்தமாக
முப்பத்தைந்தாயிரம் பேர் இவர்களுடன் நடந்திருக்கிறார்கள். மொத்தமாக மூன்று லட்சம்
மக்கள், முப்படை மற்றும் போலிஸ், பல பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள், இன்னும்
எத்தனையோ பேரின் ஆதரவுடன் நடந்திருக்கிறது இது. தமிழர் பகுதியில் தானே,
யாழ்ப்பாணத்தில் தானே என்று தட்டிக் கழிக்காது மனமுவந்து பல வழிகளில் உதவி
செய்திருக்கிறார்கள் தென்பகுதி மக்கள். இங்கேதான் புரட்சி என்கிற வார்த்தையை
விளக்குகிறேன். இலங்கையில் எதுவுமே சுவாரஸ்யமாக நடைபெறுவதில்லை. சூழல் பாதுகாப்பு,
இலக்கியம், அரசியல், எதுவுமே ஜனரஞ்சகமாக மனதளவில் உன்னதமானதாக நடைபெறுவதில்லை.
நல்ல காரியம் செய்தாலும் கூட அதையும் அசுவாரசியமாக செய்வார்கள். ஆஸ்பத்திரி கட்ட
வேண்டுமா? உலக வங்கியில் கடன் வாங்கி சீனாவை கட்ட சொல்லிவிட்டால் போகிறது என்று
செய்வார்களே தவிர, வெகுஜன விழிப்புணர்வு மாதிரியோ, மக்கள் மனங்களில் புத்துணர்வு
தருவதாகவோ செய்யமாட்டார்கள். மக்களுக்கு சுவாரசியமான சட்டங்களோ, ஏன் கண்காட்சிகள்
கூட எதோ சட்டப்படிதான் நடக்குமே தவிர எங்குமே ஒரு வரட்சி தென்படும்.
அரசியல்வாதிகள் அரசியல் தவிர வேறேதும் பேசமாட்டார்கள், மக்களோடு கலக்கமாட்டர்கள்
என்று ஒரு சுண்ணாம்புக் கட்டடம் மாதிரிதான் இலங்கை சமூகவியல். என்னளவில் முதல்
முறையாக மக்களின் மனங்களிநூடாக ஒரு பயணம் நிகழ்ந்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்த
இத்தனை சீக்கிரத்திலேயே அதி தென்பகுதி தென்மாகாண மக்கள் இந்தளவுக்கு யாழ்ப்பாணம்
என்று பாராது உதவ முன்வந்ததும், இலங்கைப் பிரபலங்கள் இதுபோன்ற ஒரு நல்ல
நோக்கத்துக்காக உண்மையாகவே வீதியில் இறங்கியதும், இரண்டு மொழியிலிருந்தும் ஒருவர்
என இரண்டு மனிதர்களின் அடிப்படை முயற்சி -
அதில் பின்னர் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரண்டதும், அத்துணை உன்னதமானவை. நிதி
கிடைக்காமல் நாயகர்கள் இருவரும் தாங்கள் வேலைசெய்யும் மாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின்
சாப்பாட்டு அறையிலிருந்து கையைப் பிசைய, அதை கவனித்துவிட்டு கைக்காசை
விட்டெறிந்திருக்கிறார் நிறுவுனர்.
வவுனியாவில் ஒரு அங்கவீனரான பிச்சைக்காரர் நிதி சேகரிப்பு உண்டியலில் ஒரு ரூபாய் போட்டிருக்கிறார். அனைவரையும் அது தொட்டது. அதேபோல குருநாகலில் ஒரு குடிசைவாழ் சிறுமி தனது சேமிப்பு உண்டியலை அப்படியே மஹேலவின் கையில் கொடுத்திருக்கிறார். கிளிநொச்சியில் யுத்தத்தால் சேதப்பட்டு குடிசையில் வாழ்ந்த சிறுவன் ஒருவர் நூறு ரூபாவை கொடுத்திருக்கிறார். இப்படி ஆங்காங்கே திரைப்படங்களில் நாங்கள் காணும் காட்சிகளை ஒத்த காட்சிகள் நடந்திருக்க, அந்த உன்னதம் (நிறைய தடவை உன்னதம் என்ற சொல்லை பாவித்துவிட்டேனா? உன்னதமான பதிவு, அதுதான்.) போதாததற்கு, ஒரு வருடம் கழித்து வைத்தியசாலை திறந்து முடிந்ததும் அவர்களை மீண்டும் தேடிப்பிடித்து சிறுவர்களுக்கு கல்விக்கும் அவர்களின் பெற்றோருக்கு வேலைக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் நாதன். எத்தனை உன்னதமான வேலை..
யாழ்ப்பாணத்துக்கு ஆஸ்பத்திரி என்றதும் கையில் கிடந்ததை கொடுத்து தென்பகுதி
மக்கள் ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டார்கள். நாளைக்கும் ஒரு சண்டை வரலாம், மீண்டும்
ரத்த ஆறு ஓடலாம். ஆனால் மனிதர்கள் மனிதர்கள்தான். புற்றுநோய் இரு இனத்துக்கும்
பொதுவானது. மனிதாபிமானமும் தான். இப்போது உருவாக்கப்படும் தென்பகுதி புற்றுநோய்
வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக பருத்தித்துறையில் இருந்து தேவேந்திர முனைவரை
ஒரு நடைபயணம் விரைவில் நடக்கும். அப்போது நாங்கள் மனிதர்கள் என்பதை காட்டுவோம்,
வாருங்கள்.
trail வலைத்தளம் : செல்வதற்கு இங்கே கிளிக்கவும். சேரும் பணம், அதை எவ்வாறு செலவிடுகிறார்கள்.. எல்லாம் பார்க்கலாம். நன்கொடை அளிக்கலாம்.
பேஸ்புக் பக்கம் :TrailSL
கருத்துகள்
கருத்துரையிடுக