காதலர் தினம் - பதிவு போடாவிட்டால் மன்மதன் சாபம்.




எந்தப் பண்டிகை நடந்தாலும் அது தமிழர்களுக்குப் புறம்பானது, அதன் வரலாற்றுப் பின்னணி மோசமானது... கொண்டாடாதே, பலகாரம் தின்னாதே என்று போடுவதையே பிழைப்பாகக் கொண்ட நான், காதலர் தினத்துக்கும் அப்படிச் செய்தால் காதலிக்குப் பதில் சொல்லவேண்டி வரும் என்பதால், எதற்கு வம்பு என்று காதலர் தினத்தைக் கொண்டாடித் தொலைய முடிவெடுத்தேன். ஏனைய பல விழாக்களைப் போலவே, காதலர் தினமும் அதன் தொடக்கத்தில் வேறு காரணங்களுக்காகப் பின்பற்றப்பட்டு, பின்னர், காலமும் வணிகமும் கலாசாரங்களும் செல்வாக்கு செலுத்த, தத்தமது ஆரம்ப அர்த்தங்களை இழந்ததுதான். ஆனால், எவருக்குமே பாதகமில்லாததாலும், ஆரம்பக் கதைகள் திரிவுபடுத்தப்படாது அப்படியே இருப்பதாலும், காதலர்களுக்கான விழாவாக இதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான். 

என்னதான் விழாவாக, தனி நாளாக கொண்டாடப்பட்டாலும், காதலர் தினத்துக்கு தனி அர்த்தம் இல்லை. அன்றைக்கு காதலைச் சொல்ல முடிவெடுப்பது முட்டாள்தனம் என்பது எனது தாழ்மையான கருத்து. காதலைச் சொல்வது உணர்வுபூர்வமாக, காதலின் கடவுள் தேர்ந்தெடுக்கும் நாளாக இருக்கவேண்டுமே தவிர, அற்ப மனிதர்களால் அது முடிவெடுக்கப்பட முடியாதது என்பது எனது அனுபவம். மற்றபடி ஏற்கெனவே காதலில் உள்ளவர்கள் தங்களது காதலைக் கொண்டாட அந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். பற்றாக்குறைக்கு இந்த முறை ஒரு விடுமுறை தினத்தில் (இலங்கையில் ) வந்திருக்கிற காரணத்தால், கொண்டாடிஆண்கள் பேர்சையும் பெண்கள்  மனதின் கவலைகளையும் காலியாக்கலாம். ஆண்களுக்கு மற்ற விஷேச காதல் நாட்களிலும் இது பாதுகாப்பானது. முதல் சந்திப்பு, முதல் bus டிக்கட் எடுத்தது போன்ற தனிப்பட்ட காதல் தினங்களை மறந்து தொலைத்து திட்டு வாங்க்கிக் கட்டுவதைப் போலல்லாமல், இந்தப் பொதுவான தினத்தில் ஏதாவது பரிசு வாங்கிக் கொடுத்து அசத்தலாம். பரிசின் தன்மையைப் பொறுத்து முத்தமோ செருப்படியோ கிடைக்கும்.


என்ன இழவோ, காதலர்களுக்கு என்று நாளை ஒதுக்கிய பிறகு, காதல் என்பது ஒரு பாச உணர்வு, அது தாய்க்கும் மகளுக்கும் வரலாம், தந்தைக்கும் சித்திக்கும் வரலாம், ஆசிரியர்க்கும் மாணவனுக்கும் இடையிலும், திருடனுக்கும் திருட்டுக் கொடுத்தவனுக்கும் இடையிலும் வருவதெல்லாம் காதல்தான் என்று யாராவது தத்துவம் கதைத்தால் அவர்களுடனான உங்கள் காதலை நிறுத்திவிடுங்கள். காதல் என்பது ஒரு தனித்துவமான உணர்வு. வரையறுக்க முடியாத அந்த - பின்னால் நான் வரையறுக்க முக்கப்போகும் - அன்பின் வடிவத்துக்குப் பெயர்தான் காதல். தாய்மை, இரக்கம், பாசம்...அதெல்லாம் காதல் இல்லை. லவ் என்கிற ஒரு சொல்லே எல்லாவித அன்பையும் குறிக்கப் பயன்படும் வரட்சி ஆங்கில மொழியின் வெட்கம் மக்களே. தமிழில் எல்லாவகை அன்புக்கும் தனித்தனிப் பெயர்கள் இருக்கிறது. காதல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உணர்வு. காதல் என்பது அது மட்டும்தான். காதலர் தினமும் அப்படித்தான். 

இயற்கையோ கடவுளோ அல்லது வேறு எதாவதோ - உயிரினங்களில் பெரும்பாலானவற்றை இரண்டு பாலாகப் படைத்தது இனப்பெருக்கம் மூலமான இன நீடிப்பின் பொருட்டுத்தான். காதலின் ஆதாரமான நோக்கமும் இன நீட்டிப்புத்தான். அதை கொஞ்சம் ஆழமாக நோண்டினால், காமம்தான் மனிதனின் நாகரிகப் பூச்சால் காதலாகிறது. (சிலருக்கு பூச்சு மட்டுமே போதுமானதாக இருக்கிறது.) காமம் என்பது,  ஓமோன்களின் அடிப்படையில் விளக்கப் பட்டாலும், அந்த அடிப்படையான காம விருப்பு விளக்க முடியாததாக இருக்கிறது. ஏனெனில், ஏனைய விலங்குகளுக்கு காமம் என்பது ஒரு பருவத்துக்குரிய (season) ஒரு வழக்கம், ஒழுங்கு. அவை தமது ஆசைக்காக எந்த நேரத்திலும் காமத்தில் ஈடுபடுவதில்லை என்றிருக்க, மனிதன் மட்டும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமல்லாது தனது ஆசைக்காகவும், இன்னும் சொல்லப்போனால், பொழுதுபோக்கு மகிழ்ச்சிக்காகவும் புணர ஆரம்பித்தது ஏன் என்பது அறியப்படாத ஒன்று. முழுமையாக ஆராயவும் முடியாதென்று நினைக்கிறேன். புணர்வதைப் பற்றி ஆராயத் தொடங்கினால்.. எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. தேனை எடுக்கிறவன் விரலை நக்காமல் விடமாட்டான்.

முற்காலத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகள், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்பா ஆண்களின் குழந்தைகள் தான் என்பதை  உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும்,பிற்காலத்தில் பரவிய பால்வினை நோய்களும்தான், ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற விதியைக் கட்டாயமாக்கியது. அதுவே, காலப்போக்கில் அறமாகவும் விழுமியமாகவும் மாற, முன் இரு இரு ஆபத்துக்களும் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகும் கூட அந்த வழக்கம் தொடர்கிறது. மனிதன் பழக்கத்துக்கு அடிமை தானே, நான் உட்பட. ஆகவே, அப்படியாக ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற தத்துவத்தோடு சமாந்தரமாகத்தான் காதல் என்கிற தத்துவமும் வளர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், காதல்தானே மனிதர்களுக்குள் ஒருத்திக்குரிய ஒருத்தனை கண்டுபிடிக்கிறது. அதனால்தான் - கற்காலத்தில் தனது குழந்தைக்குரிய தகப்பனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிடம் இருந்ததால் தான் - இன்றைவரை காதலில் விண்ணப்பிப்பவர்கள் ஆண்களாகவும் தெரிவாளர்கள் பெண்களாகவும் இருக்கிறார்கள்.

பின்னணி எக்கேடோ கெடட்டும், வாருங்கள், இளமையின் திருவிழாவை இளமையுடனே எதிர்கொள்ளுவோம்.

காதலர் தினங்களில் போடும் ஆடையின் நிறத்தை வைத்து அன்னாரின் காதல் பார்வைகளை கண்டறியும் முறையை அறிமுகப்படுத்தித் தொலைத்தவர்கள் இந்தமுறை வெளியிட்டுள்ள டிரஸ் கோட் :

பச்சை : ரெடியா இருக்கிறன்.. வாராள் வா.

மென்சிவப்பு : இதோ, இப்பத்தான் மடிந்தது.

நீலம் : தேடிக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளை : சொறி, நான் செட் ஆயிட்டன்.

சிகப்பு : போங்கடா நீங்களும் உங்கட காதலும்.. ஐ ஹேட் இட்.

மஞ்சள்  : அவள் பறந்து போனாளே !!

கருப்பு : காதலெண்டாலே வெறுப்பு.

உடுப்பே போடாதவர்கள் : நேரடியாக காமத்துக்கு ரெடி.



காதலிப்பது திருமணம் செய்வதற்காக இல்லை. காதல் என்பது மனிதர்களின் மனத்துக்கு அப்பாற்பட்ட உணர்வு. அந்த உணர்வு தாக்கும்வரை என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம். காதலை வெறுக்கலாம், தத்துவம் கதைக்கலாம், சீதனம், சாதி, உயிரியல், ஆன்மிகம் எதுவும் கதைத்து காதலை மறுதலிக்கலாம். ஆனால் காதல் என்கிற உணர்வு எத்தனை மென்மையானதொ, அத்தனை வலிமையானது. அதைத் தடுக்க எவராலும் முடிந்ததாக வரலாற்றில் பதிவில்லை. எத்தனை பெரிய கல்நெஞ்சர்களும் காதல் என்கிற கிரஷரில் அகப்பட்டு சல்லிசல்லியாகப் போனதற்குத்தான் ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த கால் மாக்ஸ்ஸே - ஆணும் பெண்ணும் சமம், எனக்கு உன்னில இருக்கிறது வெறும் காமம் என்று அறிவியல் கதைக்காமல்  காதலியின் காலில் விழுந்து கிடந்திருக்கிறார். காதல் ஹிட்லருக்கும் வந்திருக்கிறது, புத்தருக்கும் வந்திருக்கிறது. உங்களுக்கு வரவில்லை என்றால் அதற்காக வருத்தபடுங்கள். 

மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற உணர்வு தமிழர்களிடையே வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவைத்திருப்பது சாதிய அமைப்பு. அதைத் தகர்க்கும் வலிமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. (இதற்கு மறுதலையாக சில தறுதலைகள் காதலை பெற்றோரின் சாதி மரியாதைக்காக விட்டுக் கொடுத்த சம்பவங்கள் நிறைய. அதிநவீன நகரத்துப் பெண்களின் காதல், சாதி பற்றிய கண்ணோட்டத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மையான பக்கத்தை அறிந்து அப்படியே ஷாக் ஆகி நான் எழுதிய கதை ஒன்று ஒரு இளம் எழுத்தாளர் போட்டியில் பரிசெடுத்திருக்கிறது. அது அதிகாரபூர்வமாக வெளியானதும் இங்கே தருகிறேன். கதை என்னுடையதுதான், ஆனால் அதன் கரு, உண்மையானது. கொழும்பில் வசிக்கும் அதிநவீன நாகரிகமான பல்கலைக்கழகம் படிக்கும் பெண்களும், சாதி பார்க்கிறார்கள்.)


காதலர் தின சிறப்பு android apps  : valentines day special valentines day messages






என்னாதிது... பதிவுல டீட்டெய்லையே காணேல்லையே.. என்று முனகினால்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கமல்ஹாசன் கவிதைகள்

ஓளவையார் ஒருவர்தானா?-02

மியாவுக்கு கல்யாணம்